

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்.பி.க்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.பி. மைத்ரேயன் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அவையில் அவர் பேசியதாவது:
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தொலை பேசி இணைப்பகம் அமைத்து பி.எஸ்.என்.எல். இணைப் புகளை முறைகேடாகப் பயன்படுத்தினார். இந்த விவகாரம் இப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்குத் தெரியுமா?
தயாநிதி மாறனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது குறித்து அவையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளின் எம்.பி.க்களும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அவைத் தலைவர் ஹமீது அன்சாரி குறுக்கிட்டு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்குமாறு மைத்ரேயன் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டார். அவருக்குப் பதிலளித்த மைத்ரேயன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றுதான் கேள்வி எழுப்பினேன், இதுதொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தால் இழப்பு எவ்வளவு என்பது தெரிவிப்பதில் அமைச்சருக்கு என்ன தயக்கம், என்னுடைய கேள்வியில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
இதைத் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்த மைத்ரேயன் அவைத் தலைவருக்கு முன்பாக தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக எம்.பி. களிடையே வாக்குவாதம் முற்றியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.