Published : 29 Mar 2023 02:43 AM
Last Updated : 29 Mar 2023 02:43 AM

சாவர்க்கர் பற்றிய விமர்சனம் - ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ்

புதுடெல்லி: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.

இந்த பேச்சு காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். "சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம்.

அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்." என்றார் உத்தவ் தாக்கரே. தொடர்ந்து, ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் உத்தவ் தாக்கரே தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனிடையே, உத்தவ் தாக்கரே தரப்பை சமாதானப்படுத்தும் வகையிலும், ராகுலுக்கு அறிவுறுத்தும் வகையிலும் சரத் பவார் சில கருத்துக்களை இன்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முன்வைத்துள்ளார். அதில், "சிவசேனா தலைவர்கள் உணர்ச்சிவசப்படும் வகையில் பேசுவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிராவில் மரியாதைக்குரிய நபராக போற்றப்படும் சாவர்க்கரை குறிவைப்பது மாநிலத்தில் கூட்டணிக்கு உதவாது. சாவர்க்கர் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) உறுப்பினராக இருந்ததில்லை.

மேலும் எதிர்க்கட்சிகளின் உண்மையான போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜேபியுடன் மட்டும்தான். நாம் ஜனநாயகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். சர்ச்சைகள் ஜனநாயகப் பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும். எனவே உணர்ச்சி ரீதியா பிரச்சினைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளார் சரத் பவார்.

முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக இன்று ராகுல் காந்தியிடம் சஞ்சய் ராவத் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x