“பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி” - ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி | கோப்புப்படம்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், மக்கள் பிரதமர் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தியால் அதில் வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 2019-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ராகுல் காந்தி, பிரதமரின் மிகப்பெரிய பலமே அவர் மீது இருக்கும் 'இமேஜ்' தான், அதை நான் கிழித்தெறிவேன் என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் ராகுலின் அரசியல் மனநோய் முழுவதுமாக வெளிப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் அவர் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பி குற்றம்சாட்டினார். ஆனால் அதை ஒரு போதும் அவரால் நிரூபிக்க முடியவில்லை. தன்னுடைய கூற்றை நிரூபிக்க முடியாததால் அரசியல் விரக்தி அடைந்துள்ள ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடியை வசைபாடி வருகிறார்.

அன்று மோடியின் இமேஜை கிழிப்பதாக நீங்கள் சொன்ன வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறது ராகுல் காந்தி. உங்களால் ஒருபோதும் அதில் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய பலம் இந்திய மக்களே.

இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக் கூட அவர் விரும்பவில்லை. இது காங்கிரஸ் கட்சியினுடைய அரசியல் ஆணவத்தின் மற்றொரு வெளிப்பாடாகும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in