எடியூரப்பா வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் - ஷிகாரிபுராவில் 144 தடை உத்தரவு அமல்

எடியூரப்பா வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் - ஷிகாரிபுராவில் 144 தடை உத்தரவு அமல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு சதவீதத்தை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பழங்குடியினர் வகுப்பில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாரா வகுப்பினர் நேற்று கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தினர். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சதுக்கத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டுக்கு அருகே ஊர்வலம் சென்றபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். போராட்டக்காரர்கள் எடியூரப்பாவின் வீட்டின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். இதில் எடியூரப்பா வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார், ஜன்னல்கள் சேதமடைந்தன.

எடியூரப்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் வசிப்பதால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஷிகாரிப்புராவில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு முதல்வர் பசவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in