டெல்லியில் 7 வயது சிறுவன் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
டெல்லியில் 7 வயது சிறுவன் பள்ளியில் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அப்பள்ளியில் தலைமையாசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 7 வயது மாணவர் கழிவறை அருகில் மர்மமான முறையில் தொண்டை அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2-ம் வகுப்பு படிக்கும் பிரத்யுமன் தாக்குர் என்ற சிறுவன்தான் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டு இறந்தார்.
இதனை முதலில் கண்ட மாணவர் ஒருவர் அலறியடித்துக் கொண்டு மற்றவர்களின் கவனத்தைத் திருப்ப ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் போலீஸுக்கு தெரிவித்துள்ளது.
உடனே சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரத்யுமனின் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு காவல்துறை அலுவலகத்தில் சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் உண்மைக் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்வதாக பிரத்யுமனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போராட்டக்காரர் ஒருவர் கூறும்போது, "ஒரு குழந்தையை எவ்வாறு இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய முடியும். உண்மையான குற்றவாளிக்கு சிறை தண்டனை கிடைக்க வேண்டும்" என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக அப்பள்ளி பேருந்து நடந்துனர் அஷோக் குமார் என்பரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
