Last Updated : 30 Sep, 2017 10:23 AM

 

Published : 30 Sep 2017 10:23 AM
Last Updated : 30 Sep 2017 10:23 AM

அடிப்படை பாதுகாப்பே இல்லை.. இதில் புல்லட் ரயில் யாருக்குத்தேவை- வெகுண்டெழுந்த மும்பைவாசி

ரயில் நிலையங்களில் அடிப்படை பாதுகாப்புகூட இல்லை.. இதில் புல்லட் ரயில் யாருக்குத்தேவை என மும்பை விபத்து குறித்து வெகுண்டெழுந்திருக்கிறார் மும்பை புறநகர் ரயில் பயணி ஒருவர்.

மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் நேற்று திடீரென மக்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தேசம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டநெரிசிலில் சிக்கி உயிரிழந்தவர்கள் படிகளில் சுருண்டு கிடந்த காட்சி காண்போரது உள்ளத்தை உறையவைத்தது.

இச்சம்பவம் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத பயணி ஒருவர் கூறும்போது, "ரயில் நிலையங்களில் அடிப்படை பாதுகாப்புகூட இல்லை.. இதில் புல்லட் ரயில் யாருக்குத்தேவை?" என்றார்.

மற்றுமொரு பயணி கூறும்போது, "ரயில் நிலைத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவந்த நிலையில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்ட ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு நாளும் ரயில் நிலையங்களுக்குவந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கையை கருதி பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை" என்று ஆதங்கப்பட்டார்.

உடனடியாக உதவாத ரயில்வே ஊழியர்கள்..

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அங்கு பொதுமக்களும் சகபயணிகளும் உதவிக்கு விரைந்தனர். அங்கிருந்தவர்கள் தி இந்துவிடம் கூறும்போது விபத்து நடந்தவுடன் பொதுமக்களே உதவிக்கு விரைந்தனர் ரயில்வே ஊழியர்கள் யாரும் வரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி ரமேஷ், "விபத்து நடந்தவுடன் என் வீட்டிலிருந்த நான் விபத்து பகுதிக்கு விரைந்தேன். அங்கு நெரிசலில் சிக்கியிருந்த சிலரை கூட்டத்திலிருந்து மீட்டேன். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றினேன்" என்றார்.

விபத்து பகுதியில் உதவிக்குச் சென்ற பெண் தனஸ்ரீ டாங்கே கூறும்போது, "அங்கிருந்த சில பெண்களை மீட்டோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் உடலில் சிறிதளவுகூட ஆடை இல்லாமல் இருந்தனர். அதைப்பார்த்து அதிர்ந்துபோன நாங்கள் அருகிலிருந்த எங்கள் வீட்டிலிருந்த போர்வைகளை எடுத்துவந்து அவர்கள் மீது சுற்றினோம். அங்கே இருந்த நிலவரத்தைக் கண்டு நானும் என் தோழியும் கதறி அழுதோம்" என்றார்.

ரயில் நிலையங்களில் அடிப்படை பாதுகாப்புகூட இல்லை.. இதில் புல்லட் ரயில் யாருக்குத்தேவை?"

ரயில் பயணிகள் கூட்டமைப்புக்கான பொதுச் செயலாளர் கைலாஷ் வெர்மா கூறும்போது, "எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவந்த நிலையில் பயணிகள் குறுகிய பாலத்தை பயன்படுத்திவந்தனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் எவ்வித திட்டமிடலும் செய்யவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x