Published : 18 Sep 2017 06:24 AM
Last Updated : 18 Sep 2017 06:24 AM

நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் என பாராட்டு

நாட்டின் மிகப்பெரிய அணையான, சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த அணை பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1961-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு, நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1987-ல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு உதவ முன்வந்த உலக வங்கி திடீரென நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது.

இதனிடையே அணை திட்டத்தால் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் விவசாயிகள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா நதி பாதுகாப்பு அமைப்பு (நர்மதா பச்சாவோ அந்தோலன்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1996-ல் அணை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தது. பின்னர் 2000-ம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது.

அணை உயரம் அதிகரிப்பு

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அணையின் உயரம் 121.92 மீட்டராக இருந்தது. பின்னர் அந்த அணையின் உயரத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

அந்தப் பணிகள் நிறைவு பெற்று சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். குஜராத்தின் நர்மதா மாவட்டம், கெவதியா பகுதியில் நடந்த விழாவில் அணையின் 30 மதகுகளை அவர் திறந்து வைத்து மலர்களைத் தூவினார்.

பின்னர் வடோதரா மாவட்டம் டபோய் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

குஜராத் மாநிலத்துக்கு பல்வேறு பெருமைகள் உள்ளன. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த மண். சர்தார் சரோவர் அணை வல்லபாய் படேலின் கனவுத் திட்டமாகும். அவரது கனவு தற்போது நிறைவேறியுள்ளது. இந்த அணை பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் ஆகும்.

சில காரணங்களால் அணை திட்டத்துக்கு உலக வங்கி நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. அப்போது குஜராத் கோயில்கள் தாமாக முன்வந்து தாராளமாக நிதியுதவி அளித்தன. அதற்காக அந்த கோயில் நிர்வாகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல அணை திட்டத்துக்காக பழங்குடியின மக்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தைப் பாராட்டுகிறேன்.

2022-ல் புதிய இந்தியா

அணை திட்டத்தை நிறைவேற்றவிடாமல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. சர்தார் சரோவர் அணை போல ஏராளமான தடைகளை எதிர்கொண்ட அணை திட்டம் உலகில் வேறெங்கும் இல்லை. அதையெல்லாம் முறியடித்து தற்போது அணை கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இந்த அணையால் குஜராத் மட்டுமன்றி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் விவசாயிகளும் பயன் அடைவார்கள்.

நீர்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்த வல்லபாய் படேலும், அம்பேத்கரும் மேலும் சில ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்ந்திருந்தால் சர்தார் சரோவர் அணை திட்டம் 1960-70- களிலேயே நிறைவேறியிருக்கும். இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுத்திருக்கும். தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களால் 2022-ம் ஆண்டில் புதிய இந்தியா உதயமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2-வது பெரிய அணை

அமெரிக்காவின் கிரான்ட் அணை உலகிலேயே மிகப்பெரிய அணையாகும். அதற்கு அடுத்த இடத்தை சர்தார் சரோவர் அணை பிடித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய இந்த அணை மொத்தம் 88 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். மத்தியபிரதேசம், குஜராத்தில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. அதிகபட்சம் 16.10 கி.மீ. அகலமும் குறைந்தபட்சம் 1.77 மீட்டர் அகலமும் கொண்டதாகும். கடந்த 1961-ல் தொடங்கிய அணை திட்டம் சுமார் ரூ.40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முழுமை அடைந்துள்ளது.

அணையின் மூலம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் 18 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 150-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும், 9000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், எல்லையில் பணியாற்றும் பி.எஸ்.எப். வீரர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சர்தார் சரோவர் அணையின் நதிப் படுகையில் 1200 மெகாவாட் மின் நிலையமும், கால்வாய் பகுதியில் 250 மெகாவாட் மின் நிலையமும் அமைந்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 57 சதவீதம் மகாராஷ்டிராவுக்கும் 27 சதவீதம் மத்திய பிரதேசத்துக்கும் 16 சதவீதம் குஜராத்துக்கும் விநியோகிக்கப்படுகிறது.

பிறந்தநாள் பரிசு

பிரதமர் மோடி நேற்று 67-வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளின்போது மிகப்பெரிய நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று அவர் தனது பிறந்தநாள் பரிசாக சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். முன்னதாக நர்மதா நதியில் சாது பெட் தீவில் அமைக்கப்பட்டு வரும் 182 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

மேதா பட்கர் போராட்டம்

நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் தலைவர் மேதா பட்கர் தலைமையில் மத்திய பிரதேசத்தின் பர்வானியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அணைக்கட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x