

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பர்ன்ஸ், நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்ததோடு, அதிபர் பராக் ஒபாமாவின் அழைப்புக் கடிதத்தையும் வழங்கினார். அக்கடிதத்தில், செப்டம்பரில் அமெரிக்கா வருகை தருமாறு மோடிக்கு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 'தி இந்து' (ஆங்கிலம்) பெற்றுள்ள சில ஆவணங்கள், ரகசிய தகவல்கள், எத்தகைய சிரமத்திற்குப் பின்னர் அமெரிக்கா - மோடியுடனான இந்த சமரசம் சாத்தியமாகியுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அந்த ஆவணங்களின் படி, தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கனிவுடன் அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, 2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகிரா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றிய தகவல்களை சேகரிக்கும்போது மிகுந்த சந்தேகத்துடனேயே அந்த விவகாரத்தை அணுகியுள்ளது.
குஜராத்திற்கு தனது அரசியல் பிரிவு அதிகாரிகளை அனுப்பிவைத்த மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம், ஜனவரி 2011-ல் ஒரு ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. கேபிள் எண் (>DTG: 060447Z JAN 11; SENSITIVE, NOFORN)-ல் 'குஜராத் கலவரத்திற்கும் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை' என டிசம்பர் 2010 செய்தித்தாள்களில் வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி அனுப்பப்பட்டிருந்தது.
மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவும் பொதுவெளிகளில் அம்பலப்படுத்தப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த முழுக்கதையும் மோடி ஆதரவாளர்கள் உற்சாகத்தின் விளைவு" எனவும் அமெரிக்க தூதரகம் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2014 தேர்தலுக்கு முன்னதாக இந்திய அரசியலில் மோடிக்கான இடம் குறித்து அனுப்பப்பட்ட கேபிளில், "தேசிய அளவில் மோடி பிரபலமடைய சில சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக 2002 கலவரத்திற்கு வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க மோடி தவறியது எதிர்கட்சிகளுக்கு ஒரு சாதகமாகவே அமைந்துள்ளது. மோடி ஒரு சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 2002-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தகவலில் (>DTG: 261214Z MAR 10; UNCLAS, SENSITIVE, SIPDIS) மோடி தனக்கு சிறப்புப் புலனாய்வு குழு அளித்த சம்மனை ஏற்று நேரில் ஆஜராவாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. அதுதவிர, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதை இதுவரை வெற்றிகரமாக தவிர்த்து வந்த நரேந்திர மோடி, சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி நேரில் ஆஜராவதை தவிர்த்துவிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மோடி தனக்கு சம்மன் வந்திருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என கூறியதும் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட கேபிளில், "மார்ச் 21-ல் மோடி சிறப்புப் புலனாய்வு குழு முன்னர் ஆஜராகவில்லை. மாறாக, மார்ச் 22-ல் அவருக்கே உரித்தான பாணியில் குஜராத் மக்களுக்கு ஒரு வெளிப்படையான அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், குஜராத் கலவரம் தொடர்பாக தனக்கு சிறப்புப் புலனாய்வு குழு எவ்வித சம்மனும் அனுப்பவில்லை என கூறியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோடி அரசியல் செல்வாக்கு குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் வெளியான கருத்துகளையும் அமெரிக்கா கவனிக்கத் தொடங்கியது. மற்றொரு கேபிளில், மார்ச் 24-ல் தூதரக அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் சிறப்புப் புலனாய்வு சம்மன்களை தாண்டியும் 2012 குஜராத் சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் மோடி பாஜக தேசியத் தலைவராவார் என நம்பிக்கையுடன் கூறியது ஆலோசிக்கப்பட்டது.
மேலும், 2014 தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக வலுவான போட்டி வேட்பாளராக திகழ நரேந்திர மோடிக்கு மட்டுமே தகுதியிருப்பதாக அந்த தொண்டர் உறுதிபட தெரிவித்ததும், விவாதிக்கப்பட்டது.
மார்ச் 27-ல் மோடியிடம் சிறப்புப் புலனாய்வு குழு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது குறித்து அனுப்பப்பட்ட ரகசிய தகவலில் (>DTG: 291247Z MAR 10; UNCLAS, SIPDIS), "விசாரணைக்குப் பின்னர் இரு தரப்பில் இருந்தும் முக்கியமானதாக எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், மோடி ஒரு குடிமகனாக தனது கடமையை செய்துள்ளார். இதில் கட்சிக்கு எவ்வித தர்மசங்கடமும் ஏற்படவில்லை" என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோடியிடம் சிறப்புப் புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணை குறித்து சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதை இந்த விசாரணை மெய்ப்பித்திருப்பதாக முன்னாள் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதும் அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழில்:பாரதி ஆனந்த்