Last Updated : 11 Sep, 2017 12:58 PM

 

Published : 11 Sep 2017 12:58 PM
Last Updated : 11 Sep 2017 12:58 PM

குருகிராம் சிறுவன் கொலை வழக்கு: பள்ளி அலுவல் அதிகாரிகள் இருவர் கைது

டெல்லியில் 7 வயது சிறுவன் பள்ளியில் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பள்ளியின் அலுவல் அதிகாரிகள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாகக் கூறி, சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 7 வயது மாணவர் பிரத்யுமன் தாக்குர் கழிவறை அருகில் மர்மமான முறையில் தொண்டை அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

இந்நிலையில் பள்ளி அலுவல் அதிகரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், ''பிராந்தியத் தலைவர் ஃப்ரான்சிஸ் தாமஸ் மற்றும் மனித வளத் துறைத் தலைவர் ஜீயுஸ் தாமஸ் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் கைது செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.  

ஹரியானா கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அப்பள்ளியின் பேருந்து நடத்துனர் அஷோக் குமார் என்பரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

ஆரம்பகட்ட விசாரணையில் பள்ளியின் முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்களுடன் அலுவலக உதவியாளர்களும் கழிப்பறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்; அதே நேரத்தில் அவர்கள் அடையாளங்கள் பரிசோதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x