

கண்மூடித் திறப்பதற்குள் இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.இதையொட்டி, காட்சிகள் மாறி, எதிர்க்கட்சிகள் பலவும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் நிற்கின்றன. இந்த சம்பவத்துக்கு இடையே எதிர்க்கட்சிகளில் சில காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி அமைக்க தீவிரமாக முயன்று வருவதை கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பிரேம் சங்கர் தனது கட்டுரையில் சொன்னது நினைவுகூரத்தக்கது. அவர், "வரும் 2024-ம் ஆண்டு வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி உண்மையான உணர்வுடன், மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சர்வாதிகாரத்தை நோக்கிய மோடியின் ஆபத்தான நகர்வை முன்னிலைப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கூற்றும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது, சமீபத்திய பேட்டி ஒன்றில் கிஷோர், "எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமை இல்லை. பாஜகவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பாஜகவை முந்தினால் மட்டுமே அந்த கட்சிக்கு சவால் விடுக்க முடியும். எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுபட்டு உள்ளன" என்று கூறியிருந்தார்.
புறக்கணிக்கப்படுகிறதா காங்கிரஸ்? - தேசிய அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இந்தக் கூற்றுக்களின் உண்மை தெளிவாக புரியும். நாட்டின் பழம்பெரும் கட்சி, பிராந்திய கட்சிகளால் பாராமுகம் காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் மூன்றாவது அணியின் முந்தைய வரலாறுகள் நன்றாகத் தெரிந்திருந்தும், எதிர்க்கட்சிகளில் சில பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. அப்படியான முயற்சியில் முன்னணியில் இருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி. கடந்த வாரத்தில் மம்தாவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கொல்கத்தாவில் சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மூன்றாவது அணி குறித்து பேசியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி வியாழக்கிழமை (மார்ச் 23) ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் இதுதொடர்பாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த மாத கடைசியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்.
இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை வரை பேரணி செல்ல முயன்ற காங்கிரஸுடன் எதிரக்கட்சிகளில் பல அணி சேரவில்லை. அதுபோலவே ராகுலுக்கான தண்டனை குறித்தும் கூட்டணிக் கட்சிகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலன எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருகின்றன. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் மீது இருக்கும் அதிருப்தியை மிகத் தெளிவாக காட்டுகிறது.
காங்கிரஸின் அண்ணன் மனப்பான்மை: எதிர்க்கட்சிகளின் இந்த பாராமுகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அண்ணன் மனப்பான்மையும், பாரதிய ஜனதா கட்சியுடன் காங்கிரஸ் (அதற்கே தெரியாமல்!) வைத்திருக்கும் ரகசிய ஒப்பந்தமும் தான் காரணம் என்கிறார் பிரேம் சங்கர். மேலும் அவர், பாஜக அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இந்த ரகசிய கூட்டுத் தொடர்வதாகவும். இரு கட்சிகளுக்கு இடையிலான இந்த கூட்டணி வெளிப்படையானதில்லை, மறைமுகமானது. பாஜகவின் அனைத்து செயல்களையும் வார்த்தைகளில் விமர்சிக்கும் காங்கிரஸ், செயலில் பாஜகவுக்கு எதிராக பின்வாங்கும் போக்கையே கடைபிடித்து வந்துள்ளது. மத்திய மாநிலத் தேர்தல்களில் எதிர்கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முயன்றபோதெல்லாம் அந்த வாய்ப்புகளை நசுக்கி அழித்ததன் மூலம் காங்கிரஸ் இதனைச் செய்துள்ளாதக அவர் விளக்குகிறார்.
காங்கிரஸ் கட்சி இரண்டு வழிகளில் இதனைச் செய்கிறது. ஒன்று அறியாமல் செய்வது, மற்றொன்று அரசியல் பிழை. முதலாவதாக காங்கிரஸ் கட்சி கோலோச்சி வந்த மாநிலத்தில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி வெற்றி பெற்ற கட்சி, அதன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது. கடந்த சில ஆண்டுகளாக டெல்லியிலும், பஞ்சாப்பிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸின் அத்தகைய வெறுப்புக்கு ஆளாகி வருகிறது.
இரண்டாவது, மாநிலங்களில் வலிமையாக இருக்கும் பிராந்திய கட்சிகள் ஏதாவது காங்கிரஸுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் தனது பிறப்புரிமையாக கருதும் பிரதமர் பதவிக்கு அப்பிராந்திய கட்சி ஆசைப்படுவதாக குற்றம் சாட்டுவது. இவையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் அண்ணன் மனப்பான்மையின் வெளிப்பாடுகளாகும்.
ராகுல் யாத்திரை ஒரு கேள்விக்குறி! காங்கிரஸின் முக்கியமானத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி வரை நாடு தழுவிய அளவில் ஒரு யாத்திரை மேற்கொண்டார். சோர்ந்து கிடந்த காங்கிரஸ் கட்சிக்கு அந்த யாத்திரை உற்சாகம் அளித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஒரு தலைவராக ராகுலை எவ்வாறு அது முன்னிறுத்தியது. அதன் வெற்றி குறித்தும் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் போன்றவர்கள் ராகுல் காந்தியுடன் பழகிப்பார்க்காத போதிலும் அவரைத் தீவர அரசியல்வாதியாக பார்க்கவில்லை. அதனால் தான், தனது பேச்சு மற்றும் செயல்கள் மூலம், ராகுல் காந்தி, மோடியின் டிஆர்பியாக இருக்கிறார் என்று திரிணாமுல்ல் காங்கிரஸ் தெரிவிக்கிறது. மேலும், 2024ம் ஆண்டு தேர்தலின் முகமாக ராகுல்காந்தி இருக்கும் பட்சத்தில், மோடியின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது என்று அக்கட்சி சொல்லி வருகிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையை விட்டுக்கொடுத்த ராகுல் காந்தியும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் குறித்த எந்த குறிப்பையும் தனது யாத்திரையின் போது வெளிப்படுத்தவில்லை. மாறாக நாட்டின் முக்கிய பிரச்சினையாக வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல், வறுமை, வேலையின்மை பற்றியே பேசினார். அதற்கெதிராக அன்பை விதைப்பதாக மட்டுமே தெரிவித்தார். இதுவும் காங்கிரஸின் அண்ணன் மனப்பான்மையாகவே பார்க்கப்படுகிறது.
மோடியின் தந்திரம்: காங்கிரஸ் கட்சியின் இந்த பலவீனங்களை யார் உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ பாஜக சரியாகவே உணர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியாக உணர்ந்திருக்கிறார். அவரது தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்ற உந்துதலில் இருந்து மட்டும் வெளிப்படவில்லை. ஒருவேளை மோடி தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் 2002 குஜராத் கலவரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடங்கி பல்வேறு வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும் என்று மோடியும் அவரின் தளபதியான அமித் ஷாவும் நன்றாகவே அறிந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக குறைந்து வரும் ஜிடிபி, தொழில் வளர்ச்சி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளால் தங்களின் பிடி தளர்ந்து வருவதை இருவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
மோடியின் முதல் ஆட்சியாண்டு காலத்தில் தன்னைக் தக்கவைத்துக்கொள்ள மோடி கையாண்ட குஜராத் மாடல் இப்போது அவருக்கு கைகொடுக்கும் நிலையில் இல்லை. இஸ்லாமியர்களுக்கு, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பு பாஜகவின் வாஜ்பாய் மிதவாதிகள் முகாம்களை திகைப்படையச் செய்துள்ளது. இந்த திகைப்பு ஆர்எஸ்எஸ் வரை பரவியுள்ளது. இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கத் தேவையான வாக்குகளைக் கவரும் கவர்ச்சி உள்ள வரை மட்டுமே மோடி பிரதமர் முகமாக இருக்க முடியும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். மோடி அலைக்கான அடித்தளம் ஆட்டம் காண தொடங்கியிருப்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார்.
அதனால் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள அவர் அனைத்து நடவடிக்கைகளையும் கையாளத் தொடங்கியுள்ளார். அதற்காக எதிர்க்கட்சி முகாம்களை துண்டாடி, பலம் பொருந்திய பிராந்தியத் தலைவர்களை ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். முன்னர் இதற்தாக சிபிஐ, வருமானவரித் துறை, டெல்லி போலீஸை சார்ந்திருந்த மோடி தற்போது அமலாக்கதுறையை நம்பி இருக்கிறார். வலிமை வாய்ந்த மக்கள் செல்வாக்குள்ள பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சட்டத்தை மீறுபவர்களாக காட்சிப்படுத்தி, அவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் அவர்களை மதிப்பிழக்கச் செய்வது, அதன்மூலம் மறைமுறைமுகமாக பலமான எதிர்ப்பில்லாத இந்து ராஜ்ஜியத்தை நோக்கி நகர்வதே மோடியின் தந்திரம்.
என்ன செய்ய வேண்டும் காங்கிரஸ்: தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இப்போது என்ன செய்யவேண்டும். தன்னை நிரூபிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ராய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அந்த வாய்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சோனியா, இது காங்கிரஸுக்கும் நாட்டிற்கும் இக்கட்டான நேரம் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், நாட்டைச் சுதந்திரத்திற்கு வழிநடத்திய கட்சி என்பதால், நாட்டின் அரசியல் அமைப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கட்சியினருக்கு இருப்பதையும் அவர் வலியுறுத்தினார். ஆனால், அதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எதுவும் பேசவில்லை. அந்த மாநாடும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவேவின் பதவியேற்பில் பேசும் போதும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியையே புகழ்ந்தார்.
கடந்த சில நாட்களாக காட்சிகள் வெகுவாக மாறிவிட்டன. பலம் பொருந்திய பிராந்தியக் கட்சிகள் தங்களின் இருப்பை நிரூபிப்பதற்காக அதன் பங்குக்காக காத்திருக்கும் நேரம் இது. இந்த சூழ்நிலையில் இரண்டு ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியின் பலனை காங்கிரஸ் அறுவடை செய்யலாம் என்று நினைக்கிறது. அதில் தவறில்லை தான். ஆனால் அது முழுமையாக சாத்தியமில்லை என்பதும் அதற்கு தெரியும். மூன்றாவது அணி ஒன்று உருவானால் காங்கிரஸ் கூறுவது போல சந்தேகமில்லாமல் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். இது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும்.
இந்த சூழ்நிலையில் இனி காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி முந்தி வந்து நிற்கிறது. முதலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும். பாஜகவின் அராஜகங்களை மக்களிடத்தில் வெளிப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் மக்களைச் சென்றடைவதற்கான காலம் ஏற்கனவே கடந்து விட்டது.