Published : 24 Mar 2023 04:22 AM
Last Updated : 24 Mar 2023 04:22 AM

16.8 கோடி பேரின் தகவல்களை திருடி விற்க முயற்சி: ஹைதராபாத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது

ஹைதராபாத்: நாடு முழுவதுமுள்ள 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடி விற்பதற்கு முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் நகரில் உள்ள 3 போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அடையாளம் தெரியாத சிலர் சமூகவலைதளங்கள் மூலம் திருடுவதாக நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாயின. இந்த புகார்கள் குறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கினர். தனிநபர் விவரங்களை (Personal data) திருடுவது யார் என தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆதார், பான் அட்டை விவரம், பாஸ்போர்ட், குடும்ப விவரங்கள், வங்கி கணக்கு மற்றும் ஒரு சிலரின் மருத்துவ விவரங்கள் உள்ளிட்டவற்றை திருடிய சைபர் குற்றவாளிகள், அவற்றை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அதன்படி, நம் நாட்டில் உள்ள 16 கோடியே 80 லட்சம் பேரின் தனிப்பட்ட விவரங்களை விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்த சைபராபாத் கிரைம் போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா நேற்று கூறியதாவது: தனி நபரின் விவரங்கள் மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கே கேடு விளைவிக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இரண்டரை லட்சம் பேரின் முழு விவரங்களையும் சைபர் குற்றவாளிகள் திருடி உள்ளனர். காப்பீடு மற்றும் வங்கி கடனுக்காக விண்ணப்பித்த நாலரை கோடி பேரின் தனிநபர் விவரங்களும் இதில் அடங்கும். பல கோடி பேரின் சமூக வலைதள ஐடி, பாஸ்போர்ட், ஆதார், பான் எண் விவரங்களும் திருடப்பட்டுள்ளன. ஒரு அரசு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தவர்களின் முழு விவரமும் சைபர் கிரைம் குற்றவாளிகளின் கைகளுக்கு போயுள்ளது. அந்த வங்கியில் பணியாற்றும் ஒரு சிலரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

டெல்லியில் பணியாற்றும் 35 ஆயிரம் அரசு ஊழியர்களின் தனிநபர் விவரங்களும் விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி, மும்பை நகரங்களைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆதலால், நாம் முதலில் தேவையில்லாமல் நமது முழு விவரங்களையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x