பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சாமியார் ஃபலாஹரி மஹராஜ் கைது

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சாமியார் ஃபலாஹரி மஹராஜ் கைது
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுய-பிரஸ்தாப சாமியார் கவுஷலேந்திர பிரபண்ணாச்சார்ய ஃபலாஹரி மஹராஜ் சனிக்கிழமையன்று (23-9-17) போலீஸாரால் அல்வாரில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த மாதம் 21 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவரைச் சந்திப்பதற்காக இந்தப் பெண் சத்திஸ்கர் பிலாஸ்பூரிலிருந்து ஆஸ்ரமத்திற்கு வந்த போது சாமியார் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தார்.

பாபா என்று அழைக்கப்படும் ஃபலாஹரி மஹராஜ் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் செல்வாக்கு மிக்கவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் இவரை பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். மிகப்பெரிய அளவில் ஆஸ்ரமத்திற்கு நன்கொடையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தானே போய் சேர்ந்த சாமியாரை மருத்துவமனையிலேயே போலீஸ் கைது செய்தது. பிறகு இவர் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 நாட்கள் கழித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி ரக்‌ஷாபந்தன் நாளில் தன்னை சாமியார் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளிக்க பெரும் பரபரப்பானது.

இவரது சிபாரிசின் அடிப்படையில்தான் அந்தப் பெண் தன் சட்டத்தொழிலைச் செய்ய மூத்த வழக்கறிஞர் ஒருவரை டெல்லியில் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்நிலையில் தனக்கு கிடைத்த முதல் சம்பளத்தை ஆசிரமத்துக்கு நன்கொடை அளிக்க இவரது பெற்றோர் பரிந்துரைத்தனர்.

இதற்காக இவர் ஆசிரமம் சென்ற போது அன்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஆசிரமத்தில் தங்குமாறு சாமியார் அவரைப் பணித்துள்ளார். இரவில் பெண்ணை தன் அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகாரில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமியார் ராம் ரஹிம் கைதுக்குப் பிறகு புகார் தெரிவிக்க தனக்கு தைரியம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 11-ம் தேதிதான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட அல்வார் போலீஸார் பெண்ணை ஆசிரமத்தில் சம்பவம் நடந்த அறையைக் காட்டுமாறு கூறி அழைத்துச் சென்றனர். மேலும் அன்று அல்வார் ரயில் நிலையத்தில் இவரைக் கொண்டுவந்து விட்ட பாபாவின் பக்தர் யார் என்று அடையாளம் காட்டவும் போலீஸார் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் சாமியாரின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆசிரமத்தில் பாபாவின் பக்தர்கள் பெரிய அளவில் கூடி ஆர்பாட்டம் செய்ததால் போலீஸாருக்கு வேலை கடினமானது.

இந்நிலையில் ஃபலாஹரி மஹராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in