Published : 21 Mar 2023 12:39 PM
Last Updated : 21 Mar 2023 12:39 PM

"டெல்லி பட்ஜெட்டை நிறுத்தாதீர்கள்"- பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: "தயவு செய்து டெல்லி அரசின் பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்" என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லிக்கான 2023 - 2024ம் நிதியாண்டுக்கா பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேராவையில் தாக்கல் செய்யப்பட இருந்தது. இதனை அம்மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்ய இருந்தார். இந்தநிலையில், நேற்று (திங்கள்கிழமை) மாலை, டெல்லி பட்ஜெட்டை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் நிறுத்தி வைக்கப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி மக்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? தயவுசெய்து டெல்லியின் பட்ஜெட்டை நிறுத்தாதீர்கள். தங்களுடைய பட்ஜெட்டை நிறைவேற்றக் கோரி டெல்லி மக்கள் உங்களை கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அம்மாநில நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிகையில், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி பட்ஜெட்டை முடக்கி வருவதாகவும், பட்ஜெட்டை தாமதப்படுத்துவதில், டெல்லி தலைமைச் செயலாளருக்கும், நிதித்துறை செயலாளருக்கும் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி பட்ஜெட்டுக்கு உள்துறை அமச்சகம் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வாங்குவது அவசியம். இந்தநிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள விபரம் அறிந்த அதிகாரிகள் கூறுகையில், டெல்லி துணைநிலை ஆளுநர் எழுப்பியுள்ள சில சந்தேகங்களின் காரணமாக பட்ஜெட் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், "அரவிந்த் கேஜ்ரிவால் அரசு இரண்டு ஆண்டுகளில் விளம்பரங்களுக்கான செலவினை இரட்டிப்பாக்கி உள்ளது குறித்து துணைநிலை ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். அதேபோல, ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசினுடைய திட்டங்களின் பலன்கள் டெல்லியின் ஏழைமக்களைச் சென்றடைவது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் டெல்லி நிதியமைச்சர் நேற்றைய தனது ட்விட்டர் பதிவொன்றில், "டெல்லி பட்ஜெட் மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக முன்கூட்டியே மார்ச் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தபோதிலும், உள்துறை அமைச்சகத்தின் கேள்விகள் அடங்கிய கோப்பு இன்று (திங்கள்கிழமை) மாலைதான் என் கைகளுக்கு வந்தது. உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று, மீண்டும் அதனை இரவு 9 மணிக்கு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சம்மந்தம் இல்லாத கேள்விகளை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. டெல்லி பட்ஜெட்டை நிறுத்துவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள்" என்று தெரிவித்துள்ளார்.

அரவிந்த கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பதிவொன்றில், "தினந்தோறும் பல தடைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும்,டெல்லி அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்த தடைகள் உருவாக்கப்படாமல், எல்லா அரசுகளும் ஒற்றுமையாக, மக்களின் நலனுக்காக செயல்படும் நிலை இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். டெல்லி இன்னும் வேகமாக வளரும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x