Last Updated : 21 Mar, 2023 04:51 AM

 

Published : 21 Mar 2023 04:51 AM
Last Updated : 21 Mar 2023 04:51 AM

டெல்லியில் மகாபஞ்சாயத்து | மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்த விவசாயிகள் - ஏப்ரல் 30-ல் மீண்டும் கூடப் போவதாக அறிவிப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மத்திய அரசு அந்த 3 சட்டங்களை வாபஸ் பெற்றது. அப்போது, மத்திய அரசால் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனப் புகார் உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நேற்று கூடியது.

இதற்கான ஏற்பாடுகளை சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்) செய்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்தும் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின ஒருங்கிணைப்பு குழு சார்பில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ராம்லீலா மைதானத்தில் கூடிய விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மேதா பட்கர், டாக்டர் தர்ஷன் பால் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.

மகாபஞ்சாயத்து முடிந்த பிறகு, அதன் பிரதிநிதிகள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேற்று மதியம் நேரில் சந்தித்தனர். அப்போது, அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அவ்வாறு வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால், ஏப்ரல் 30-ல் விவசாயிகள் பெரிய அளவில் டெல்லியில் மீண்டும் கூட இருப்ப தாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தமிழக விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பிக்க பார்க்கிறது. மரபணு மாற்று விதைகளை வேளாண்மையில் அனுமதித்து மண்ணையும் மக்களையும் அழிக்க நினைக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது’’ என்றார்.

சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 வாபஸ், ஓய்வூதியம் ஆகியவை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்ற புகாரில் கைதானவரின் தந்தையான அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. மேலும், போராட்டத்தின்போது இறந்த 740 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மகாபஞ் சாயத்துக்கு பின் டெல்லியின் எல்லைகளில் மீண்டும் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதை எதிர்பார்த்து மத்திய அரசும் 2 ஆயிரம் காவலர்களை குவித்தது. ஆனால், பஞ்சாப் விவசாயிகளில் பலரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அந்த மாநிலத்தில் பிரிவினைவாதி அம்ரித்பாலை கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதால் அந்த மாநில விவசாயிகள் இதில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x