

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக அமித் ஷா (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே இந்தப் பதவியைப் பெற்ற முதல் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இப்போதைய தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதில், பிரதமர் நரேந்தர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உட்பட முக்கிய தலை வர்கள் 11 பேர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் பொருளாதார அறிக்கையை சமர்ப்பித்த பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடைசி நேரத்தில் வந்து கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘நான் மிகவும் கனத்த மனதுடன் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றேன். ஏனெனில், அப்போது தலைவராக இருந்த நிதின் கட்கரி மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது உள்துறை அமைச்சர் பொறுப்பை எனக்கு பிரதமர் அளித்தமையால் என்னால் தலைவர் பொறுப்பை தொடர முடியவில்லை’’ என்றார்.
ஆட்சிமன்ற தலைமைக் குழுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், அக்குழு கட்சியின் புதிய தலை வராக அமித் ஷாவை ஏகமனதுடன் தேந்தெடுத்திருப்பதாகவும் ராஜ்நாத் அறிவித்தார். இதை டெல்லியின் பல இடங்களில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிரதமர் நரேந்தர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர் குஜராத்தைச் சேர்ந்த அமித் ஷா. இவர், கடந்த மக்களவை தேர்தலில் உபி மாநில பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது உழைப்பால் உபியில் உள்ள 80-ல் பாஜகவுக்கு 71 தொகுதிகள் கிடைத்ததால் அக்கட்சித் தலைவர்களால் பெரும் பாராட்டை பெற்றார். இதன் காரணமாக அமித் ஷா, பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ராஜ்நாத் மேலும் கூறும்போது, ‘‘அமித் ஷாவிடம் ஏராளமான புதிய உத்திகள் உள்ளன. இவர் உபி-யின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து மாபெரும் சாதனை படைத்தார். இதுபோன்ற வெற்றி, உபி-யின் வரலாற்றில் பாஜகவுக்கு இதுவரை கிடைத்ததில்லை’’ எனப் பெருமிதப்பட்டார்.
கடந்த ஜனவரி 23, 2013-ல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி ஏற்ற ராஜ்நாத், பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடியை அறிவிப்பதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால், அமித் ஷா, குஜராத் முதல்வராக மோடி இருந்தது முதல் அவரது வலதுகரமாகக் கருதப்படுகிறார்.
இந்த அறிவிப்பின்போது, பாஜக அலுவலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அரசு அடையாள அட்டை தாங்கிய பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கடைசியில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் பின்னர் பதில் அளிப்பதாக அமித் ஷா கூறிவிட்டார்.