பிரதமர் மோடிக்கு அடுத்து... ‘தேசிய முகம்’ ஆகிறாரா யோகி ஆதித்யநாத்?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 113-வது முறையாக வாரணாசி சென்றதும், அங்கு 100-வது முறையாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ததும் ஊடகங்களில் செய்தியானது. இதனைத் தொடர்ந்து, முதல்வராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையோட்டி, நேற்று (மார்ச் 19) அயோத்தி சென்று ஹனுமன் மற்றும் ராம் கோயில்களில் வழிபாடு செய்ததும் செய்தியாக்கப்படுகிறது. இவை எல்லாம், பாஜகவின் அடுத்த பிரதமர் முகத்துக்கான தேடலில், மோடியின் அடுத்த அரசியல் வாரிசாக யோகி ஆதித்யநாத் முன்நிறுத்தப்படுவதையே சுட்டிக்காட்டுகிறது என்ற பேச்சு நிலவத் தொடங்கியிருக்கிறது.

20-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்துத்துவத் தலைமை, இந்து மகா சபை, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவ்க் சங்கம் என்ற இரண்டு இந்து ராஜ்ய அரசியல் சக்திகளால் இரு துருவங்களென பிளவுபட்டு நின்றது என்கிறார் வரலாற்று துறை ஆசிரியரான இயன் கோப்லாண்ட். இந்து மகா சபையின் வி.டி.சாவர்க்கர், இந்து சர்வாதிகார மாதிரி ஒன்றை விரும்பினார். சங்க் பரிவாரோ, சித்தாந்தம் மற்றும் அமைப்பு ரீதியாக வேரூன்றி, அதன் மூலம் தேசத்தை மறு உருவாக்கம் செய்யும் நீண்ட காலத்திட்டத்தை கையில் எடுத்தது. ஆனாலும் இரண்டும் ஒரு கூட்டு அரசியல் தலைமையையே கோரி நின்றன. விளைவாக சந்தேகமில்லாமல் ஆர்எஸ்எஸ் மாதிரியே நிலைத்து நின்றது.

பிளவுகள், விலகல்களால் இந்து மகா சபை நிர்மூலமாகிவிட, தன்னுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய, தன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர்களை ஊக்குவிப்பதன் மூலம், மைய நீரோட்டத்தில் ஆர்எஸ்எஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. சமீபத்தில் அகமதாபாதிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் நடந்த காட்சிகளைப் போல இந்து ராஜ்ஜியத்தின் உள்கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழ்நிலை இங்கு நிலவுகிறது என்பதை சங்பரிவார் உணர்வதற்கு 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

முன்னிருத்தப்படும் யோகி: இந்தச் சூழ்நிலையில் இந்து ராஜ்யத்தைக் கட்டமைக்கப்போகும் "இந்து ஹிருதய் சாம்ராட்" பட்டத்திற்கு நரேந்திர மோடி மட்டும் உரிமை கோரிவிட முடியாது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அந்தப் பட்டத்திற்கான போட்டியில் இருக்கிறார். இதற்கு முன் மோடியால் மட்டுமே சாதிக்கப்பட்ட கவர்ச்சிமிக்க இந்துத்துவத் தலைவர் என்ற இடத்திற்கு இப்போது யோகியும் உயர்த்தப்பட்டுள்ளார். இதனை கடந்த சில மாதங்களில் நடந்த மூன்று சம்பவங்களின் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

சம்பவம்-1: இந்தாண்டு (2023) ஜனவரி மாதம் நடத்தப்பட்ட "மூட் ஆஃப் தி நேஷன்"-ன் கருத்துக்கணிப்பு, 39 சதவீத மக்கள் யோகி ஆதித்யநாத்தை சிறந்த முதல்வராக கருதுவதாகக் கூறியது. கடந்த 2013-ம் ஆண்டு இதே கருத்துக் காணிப்பில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று 36 சதவீதம் மக்கள் விரும்பியதாக கூறப்பட்டிருந்தது.

சம்பவம் -2: பிப்ரவரி மாதத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு. அப்போது அங்கு வந்திருந்த பிரதான ஊடகங்கள் எல்லாம், "34 லட்சம் கோடி முதலீடு" என்பதை பிரம்மாண்டப்படுத்தின. தொழிலதிபர் முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் இது உத்தரப் பிரதேசத்தின் பொற்காலம் என்றும். "இந்தியாவின் நம்பிக்கையின் மையம்" என்று புகழ்ந்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் தன் பங்கிற்கு "புதிய இந்தியாவின் வளர்ச்சி எந்திரம்" என்று உத்தரப் பிரதேசத்திற்கு பெயர் சூட்டினார்.

சம்பவம்-3: கடந்த வாரத்தில், பாஜவின் மூத்த அமைச்சர் நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு அவரது செயல்களில் (நல்லவர்களை காக்க புல்டோசர்களை பயன்படுத்துவது, தீயவர்களை அழிப்பது) ராமராஜ்யத்தின் திறனைப் பார்ப்பதாக கூறியிருந்தார். கட்கரியின் அரசியல் அடித்தளம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூரில் இருப்பதாக கருதப்படுகிறது என்பது இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்க மூன்று மாதங்களில், யோகி ஆதித்யநாத் புதிய இந்தியாவின் பிரதமர் வேட்பாளரின் தகுதிகளான, இந்துத்துவா அடித்தளம், வணிகர்களின் ஆதரவு, ஆர்எஸ்எஸ் தலைவவர்களின் ஆதரவு என்ற மூன்று முனைகளை உரசிப் பார்த்துள்ளார். இதனால், நாட்டின் முக்கிய தலைமை பதவிக்கு அவர் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் என்று அர்த்தமில்லை. போட்டியாளர்களின் வரிசையில் கொஞ்சம் முந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

கவர்ச்சியான தலைவர்: பத்து வருடங்களுக்கு முன்பு இந்துத்துவ - ஊடக - வணிகச் சூழல் நரேந்திர மோடியை தேசிய கதாபாத்திரமாக உருவாக்க முயன்றபோது, ஆங்கில ஊடகங்கள், யோகி ஆதித்யநாத்தை கோரக்பூரின் ஹிந்து யுவ வாஹினி அமைப்பினருக்கு கட்டளையிடும் ஒரு பிதாமகன் போல சித்தரித்தன. இதன்மூலம் கவர்ச்சிகரமான இந்துத்துவ தலைமையை கட்டமைப்பது குறித்த ஆய்வுக்கு ஆதித்யநாத் சரியாக தீனிபோடுகிறார்.

இந்தக் கவர்ச்சியின் மூல ஆதாரம் அந்தத் தலைவரின் தனிப்பட்ட பண்புகளில் இருந்து மட்டும் பெறப்படுவதில்லை, மாறாக, உலக பற்றுகளைத் துறத்தல் மற்றும் இந்து உலகின் கண்ணோட்டத்திலான தனிப்பட்ட, சமூக நோக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருந்போதிலும், இந்த கவர்ச்சிகரமான தலைமையை கட்டமைப்பதில் அரசியல் சூழல் மற்றும் வாக்களர்களின் அரசியல் நிலைப்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அரசியல் சூழல் மூன்று முக்கியமான விஷயங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அது உத்தரப் பிரதேசத்தில் எவ்வாறு செயல்பட்டது என்று அரசியல் விஞ்ஞானிகளான ஆர்.ஜென்கின்ஸ் மற்றும் ஏ.எம். கோட்ஸ் ஆகியோர் தங்களின் புத்தகமான "ரீஇன்வென்டிங்க் அக்கவுண்டபிளிட்டி" மூலமா விளக்குகின்றனர். அதாவது, தாராளமயமாக்கலுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மூன்று அடிப்படையான மாற்றங்களினால், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளால் வாக்களர்களை திருப்திபடுத்த முடியவில்லை. ஒன்று, வேகமாக வளர்ந்த கிராம பொருளாதாரம் (குறிப்பாக 2000த்தில்), இரண்டாவது, அதுவரை அதிகாரத்தை ருசித்துப்பார்க்காத பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. மூன்றாவது, மாநிலத்தைத் துண்டாடி உள்ளூரில் உள்ள உயர்வர்க்கத்தினரால், பொருளாதார அதிகாரத்தை கைப்பற்றுவது.

இந்த அடிப்படையில், யோகி ஆதித்தயநாதின் அரசாங்கத்தை, அவர் கோரக்பூரின், கோரக்நாத் கோயில் மடத்தில் முன்னெடுத்த சர்வாதிகார மாஃபியா ராஜ்ஜியத்தின் மாதிரி அரசு என்று வரைப்படுத்துகிறார் மானுடவியலாளரான லூசியா மிச்சிலூட்டி. அவர் இதனை, கவர்ச்சிமிக்க சத்திரிய யோகி தனது ஆளுமையை தெய்வீக ஆட்சி மற்றும் ஜனநாயக மக்கள் இறையாண்மையுடன் இணைக்கிறார் என்கிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் கட்கரி, ஆதித்யநாத்தை கிருஷ்ணருடன் ஒப்பிட்டது தற்செயல் இல்லை.

மோடியின் வழியில்: இந்த இடத்தில், முஷாஃபர் நகரில் நடந்த கலவரங்களை, அந்நகரின் சமூக பொருளாதார அடிப்படையில் இணைத்து வெளியான சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று அதிக கவனம் பெறுகிறது. அது இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளை முன்வைக்கிறது. ஒன்று, இந்த கலவரம், அரசியல் ரீதியாக தேர்வு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதாவது முந்தைய தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவாக, இந்து ஜாட்களும், முஸ்லிம்களும் சமூக ரீதியாக ஒற்றுமையாக இருக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாஜகவும், அதன் துணை அமைப்புகளும் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இரண்டாவது, ஜாட் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை இந்துக்களுக்குள் அதிக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் கிராமங்களில் கலவரம் தீவிரமாக இருந்தது.

புல்டோசர் மற்றும் என்கவுண்டர் நிகழ்வுகள் ஆதித்யநாத்தின் வழக்கமான கவர்ச்சியான தலைமை போன்றவை மாநிலத்தின் அன்றாட நிகழ்வுகளில் முஸ்லிம் வெறுப்பை இயல்பாக விதைக்கின்றன. இதன்விளைவாக, பெருவாரியான அளவில் இந்து அரசியல் ஒற்றுமை ஊட்டப்படுகிறது. இது பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை என்றாலும் இந்து ராஜ்ய பசிக்கும், அதன் சாதனையையும் கொண்டாடுகிறது. இதன் மூலம் யோகி ஆதித்யநாத் இந்து சாம்ராஜ்யத்தின் முக்கியமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளார். இது அவரை நாட்டின் சிறந்த முதலமைச்சராக மட்டும் இல்லாமல், புதிய இந்தியாவின் பிரதமருக்கான போட்டியில் முன்னணியிலும் நிற்க வைத்துள்ளது.

- தி டெலிகிராப் ஆன்லைனில் அரசியல் ஆய்வாளர், பத்தி எழுத்தாளர் ஆசிம் அலி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம் இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in