“ரகசிய ஒப்பந்தப்படி மோடியின் வழிகாட்டுதலுடன் பேசுகிறார் மம்தா” - காங்கிரஸ் விமர்சனம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மம்தா பானர்ஜி விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மகிழ்ச்சியடைவார்" என்று கூறினார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸின் உள்கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மம்தா பானர்ஜி, "ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கி, பாஜக வேண்டுமென்றே ராகுல் காந்தியை ஹீரோவாக்க முயல்கின்றனர். பாஜக தனது சொந்த நலனுக்காக இதனைச் செய்கிறது. இதனால் மற்ற எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்க முடியாது. அவர்கள் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், வரும் மே, ஜூன் மாதங்களில் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முர்ஷிதாபாத் மற்றும் மால்சா பகுதிகளில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து 2,000 தொண்டர்கள் வெளியேறி காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலின்போது பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதில், 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in