2034-ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33% ஆக இருக்கும்: அமித் ஷா

அமித் ஷா | கோப்புப்படம்
அமித் ஷா | கோப்புப்படம்
Updated on
1 min read

காந்திநகர்: இந்திய பால் பண்ணை சங்கம் (ஐடிஏ) 49வது பால்பண்ணைத் தொழில் மாநாட்டை குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடத்தியது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில், ‘உலகுக்கு இந்தியா வின் பால்வளம்: வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது.

உலகின் மிகப் பெரிய பால்உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. உலகின் மிகப் பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதி நாடாக இந்தியா மாற நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பால் வளத்துறை ஆண்டுக்கு6.6 சதவீதம் வளர்ந்து வருகிறது.தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தை நாங்கள் ஊக்குவிப்போம். நாட்டில் உள்ள 2 லட்சம் பஞ்சாயத்துகளில் கிராமப்புற பால்பண்ணைகள் அமைக்க கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து பணியாற்றும். இதன் பயனாக, பால்வளத்துறையில் வளர்ச்சி வீதம் 6.6 சதவீதத்திலிருந்து 13.80 சதவீதமாக அதிகரிக்கும்.

கிராம அளவில் புதிய பால்பண்ணை சங்கங்கள் அமைக்கப்பட்ட பின்பு, உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 33 சதவீதத்தை எட்டும். நமது பால் பொருட்களின் ஏற்றுமதி தற்போது உள்ள அளவைவிட 5 மடங்கு அதிகமாக இருக்கும். 2033-34-ம்ஆண்டுக்குள், இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 330 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டும்.

இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் நாள் ஒன்றுக்கு 126 மில்லியன் லிட்டராக உள்ளது. இது உலகளவில் மிக அதிகம். பால் உற்பத்தியில் 22 சதவீதம் பதப்படுத்தப்படுகிறது. பால் பொருட்கள் ஏற்றுமதி, விவசாயிகள் வருமானத்தை மேலும் அதிகரிக்கும். பால் பவுடர், வெண்ணெய் மற்றும் நெய் ஏற்றுமதியில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

பெண்கள் மற்றும் ஊரகபொருளாதாரத்தை மேம்படுத்தியதில் கூட்டுறவு பால்பண்ணைகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in