Published : 29 Sep 2017 11:02 am

Updated : 29 Sep 2017 11:25 am

 

Published : 29 Sep 2017 11:02 AM
Last Updated : 29 Sep 2017 11:25 AM

80-வயதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்: யஷ்வந்த் சின்ஹா மீது அருண் ஜேட்லி சூசகத் தாக்கு

80

பொருளாதாரத்தை மோடி-அருண்ஜேட்லி கூட்டணி கையாளும் விதம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்த யஷ்வந்த் சின்ஹா மீது அவர் பெயரைக் குறிப்பிடாமல் அருண் ஜேட்லி சூசகத் தாக்குதல் தொடுத்துள்ளார்.

சின்ஹா பெயரைக் குறிப்பிடாமல், ‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர், இன்னொரு முன்னாள் நிதியமைச்சருடன் சேர்ந்து பணியாற்றுவது போல் தெரிகிறது’(ப.சிதம்பரம்), பத்தி எழுத்தாளராகச் செயல்பட ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்றெல்லாம் யஷ்வந்த் சின்ஹாவைத் தாக்கியுள்ளார்.


மேலும் தான் இவர்களைத்தான் சொல்கிறேன் என்பதை சூசகமாகக் குறிப்பிட்ட அருண் ஜேட்லி, “என்னுடைய இந்த தற்போதைய பணியில் (நிதியமைச்சகம்) சிறப்பான, தகுதி வாய்ந்த முன்னோடிகள் இருந்துள்ளனர். ஒருவர் முன்னாள் பிரதமர் (மன்மோகன்), மற்றொருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் (பிரணாப் முகர்ஜி), நான் இவர்களைக் குறிப்பிடவில்லை. சிலரைப் பற்றி பேசிவிட்டு பிரச்சினைகளைத் தவிர்ப்பது சுலபமாகச் செய்யப்படுகிறது” என்றார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் ராய் உடன் இணைந்து ஜேட்லி எடிட் செய்த ‘‘India at 70, Modi at 3.5 – Capturing India’s transformation under Narendra Modi.’ என்ற புத்தகத்தை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி புத்தகத்தின் தலைப்பை பற்றி கூறும்போது யஷ்வந்த் சின்ஹா மீது தனிப்பட்ட முறையில் விமர்சனம் வைத்தார், ஆனால் பெயர் குறிப்பிடவில்லை. 70-ல் இந்தியா, 3.5-ல் மோடி, 80 வயதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர் என்று உங்கள் புத்தகத் தலைப்பு இருந்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று சின்ஹாவின் வயதைக் குறிப்பிட்டு விமர்சித்தார் அருண் ஜேட்லி.

அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் தனியார் முதலீடுகளை மீண்டும் அதிகரிக்கவே உதவும் என்று கூறி “2012-14 காலக்கட்டத்தில் இந்த விவகாரத்தில் காட்டப்பட்ட அலட்சியம்” குறித்து சூசகமாகக் குறிப்பிட்டார்.

“2019-க்குள் ஒவ்வொரு கிராமமும் சாலை வழியாக இணைக்கப்படும். ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதி பெறும். ஒவ்வொரு வீட்டுக்கும் 2018-க்குள் மின்சார இணைப்பு. இப்படித்தான் இந்தியா 70 என்பதை நாங்கள் சித்திரப்படுத்துகிறோம். ஆனால் இந்தியா 70-வது வயதில் இருக்கும் போது அரசியல் கதையாடலை மாற்றும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

எனக்கு முன்னாள் நிதியமைச்சர் என்ற பெருந்தகைமை இல்லை, அல்லது முன்னாள் நிதியமைச்சராக இருந்து பத்தி எழுத்தாளராக மாறும் தகைமையும் இல்லை, ஆகவே நான் வசதியாக ‘கொள்கை முடக்குவாதம்’ என்பதை மறந்து விட்டேன். 1998-2002-ல் வங்கிகளின் வாராக்கடன் 15% ஆக இருந்ததையும் மறந்து விட்டேன். 1991-ம் ஆண்டு அன்னியச் செலாவணி கையிருப்பு 4 பில்லியன் டாலர்கள் இருந்ததை வசதியாக மறந்து விட்டேன்” என்று யஷ்வந்த் சின்ஹா மீது கடும் விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல், நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து தாக்கினார் அருண் ஜேட்லி.

மேலும் 1999-ம் ஆண்டு தான் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பேசும் போது எல்.கே.அத்வானியின் அறிவுரையை நினைவு கூர்ந்த அருண் ஜேட்லி,

“நாடாளுமன்றமாயினும் வெளியேயாயினும் பிரச்சினைகளைப் பேசுங்கள், தனிமனிதர்களைப் பற்றி பேசுவதைத் தவிருங்கள் என்றார், ஆனால் நான் இந்த விதிமுறையை எப்போதாவது மீறியிருக்கிறேன், ஆனால் முடிந்தவரை அவர் கூறியதை பின்பற்றவே முயற்சி செய்கிறேன், என்றார் அருண் ஜேட்லி



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x