எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம் பாஜக-காங். கருத்து மோதல்

எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம் பாஜக-காங். கருத்து மோதல்
Updated on
1 min read

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஆளும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே பெரும் கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம், மக்களவைத் தலைவரின் முடிவுக்கு உள்பட்டது. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சியின்போது மட்டும் எதிர்க்கட்சி அந்தஸ்து தர வேண்டும் என்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை அளிப்பதில் பாஜக தாராளமாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றனர். இது மக்களின் தீர்ப்பு. அரசியலமைப்புச் சார்ந்த நடைமுறையும் கூட. மக்களவைத் தலைவரின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

சில மரபுகள், விதிகள், நெறிமுறைகள், முன்நிகழ்வுகள், வழிகாட்டல்கள் மக்களவைத் தலைவருக்கு உள்ளன. இவற்றின்படிதான் நாம் நடந்தாக வேண்டும் என்றார்.

நீதிமன்றம் செல்வோம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறியதாவது:

மக்களவையில் 10 சதவீத உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தர முடியாது என்று எந்த விதியும் இல்லை.

மக்களவைத் தலைவரை, அரசியல் கட்சி நியமித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் விவாதத்துக்குரிய சூழலின்போது, மக்களவைத் தலைவர் எடுக்கும் முடிவு பாஜக மற்றும் நரேந்திர மோடியின் முடிவாகவே இருக்கும். ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து மறுக்கப்பட்டால், நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in