

பாஜகவை அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. வேவு பார்த்தது தொடர்பாக வெளியான தகவல் குறித்து அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியிடம் மத்திய அரசு புதன்கிழமை விளக்கம் கேட்டது.
இந்தியாவில் செயல்படும் அமைப்பையோ, தனி நபரையோ அந்நிய நாட்டின் உளவுத் துறை கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்றும் மத்திய அரசு எச்சரித்தது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “அமெரிக்க அரசின் அனுமதியுடன்தான் இதுபோன்று வேவு பார்க்கும் பணியை என்.எஸ்.ஏ. மேற்கொள்கிறதா என்று அமெரிக்க அரசிடம் கேள்வி கேட்டுள்ளோம். அவ்வாறு அனுமதி பெற்றுத்தான் வேவு பார்க்கப்பட்டது என்றால், அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அந்நாட்டிடம் கூறியுள்ளோம். இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் இருந்து வரும் விளக்கத்துக்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
எனினும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து எந்த அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது என்ற விவரத்தை தெரிவிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார். அமெரிக்கத் தூதராக இருந்த நான்சி பாவெல் பதவி விலகியதைத் தொடர்ந்து தற்காலிகத் தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., பல்வேறு நாடுகளின் அரசுகளையும், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி, பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, லெபனானில் அமால் கட்சி, எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உள்பட பல்வேறு நாடுகளின் முக்கிய கட்சிகளையும் 2010-ம் ஆண்டிலிருந்து வேவு பார்த்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.