Published : 16 Sep 2017 10:00 AM
Last Updated : 16 Sep 2017 10:00 AM

சிறைகளில் இயற்கைக்கு மாறாக இறந்த கைதிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் இயற்கைக்கு மாறாக இறந்த கைதிகளின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 1,382 சிறைகளில் மனிதநேயமற்ற நிலை உள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சிறைகளில் இயற்கைக்கு மாறாக இறந்த கைதிகளின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள், தானாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த கைதிகளின் நெருங்கிய உறவினரை கண்டறிந்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குற்ற ஆவண பதிவேட்டில் 2012 முதல் 2015 வரையிலான ஆவணங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம்.

சிறையில் கைதிகள் உயிரிழப்பது, குறிப்பாக விசாரணைக் கைதிகள் இயற்கைக்கு மாறாக இறப்பது அவமானகரமானது. இதை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கைதிகளுக்கும் மன நல ஆலோசனைகளை வழங்க போதுமான கவுன்சிலர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும். குறிப்பாக முதல்முறை தவறிழைப்போருக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம். இதில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல அனைத்து கைதிகளுக்கும் முறையான மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி சிறைச்சாலைகளை அமைக்க வேண்டும்.

சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறாக உயிரிழந்த குழந்தைகளின் விவரங்களை மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை சேகரிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து குழந்தைகள் இறப்பைத் தடுப்பது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிகளை வரையறுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x