

நுழைவாயில்: காட்சி - 1: 2022-ம் ஆண்டு மார்ச் மாத இறுதி: பத்திரிக்கை ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி, “ஜனநாயகத்திற்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம். காங்கிரஸ் வலுவிழந்தால் எதிர்க்கட்சி இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். கட்கரியின் பேச்சு அன்று தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு கிடந்த காங்கிஸ் கட்சிக்கு ஆறுதலாக கட்கரியின் பேச்சு இருந்திருக்கலாம். (அப்போது காங்கிரஸில் உள்கட்சி தேர்தல் நடந்திருக்கவில்லை. ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றிய பேச்சே இல்லை) ஆனால், பாஜகவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும். ‘தங்களின் பரம எதிரிக்காவும் பரிந்து பேசும் கட்சி தான் பாஜக’ என பாராட்டு கிடைக்கும் என கட்கரியும் பாஜகவும் நினைத்திருக்கலாம். ஆனால், நடந்ததோ வேறொன்று... பிராந்திய கட்சிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறதா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் வலுவிழக்கிறது என்ற உண்மையை போலவே, பிராந்திய கட்சிகள் பலம் பெருகின்றன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. கட்கரியின் கரிசனம் (!) யாருக்கு புரிந்ததோ இல்லையோ.. மோடிக்கு நன்றாகவே புரிந்தது என்றே தோன்றுகிறது.
காட்சி 2: 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, “எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தற்காக அமலாக்கத்துறைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களால் கூட இதனைச் செய்யமுடியவில்லை. அடிக்கடி பெற்ற தேர்தல் தோல்விகள் கூட அவர்களை (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைக்கவில்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளால் அவர்கள் ஒன்றாக கைகோர்த்திருக்கிறார்கள்” என்றார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு காரணம் இல்லாமல் இல்லை. தற்போது தேர்தல் களத்தில் நடக்கும் காட்சிகள் அப்படி. ஆளும் பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்கட்சிகளின் மீது ஏவி வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அப்படி புலனாய்வு அமைப்பு ஏவப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலையும், அதற்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கும் கட்சிகளின் பட்டியலையும் பார்த்தால் உண்மை புரியும்.
விசாரணை வளையம்: ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட தலைமை எனச் சொல்லப்படும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டாலும் கைது செய்யப்பட்டு, காவல் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே அமைச்சராக இருந்த போது நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு லாலு பிரசாத் யாதவின் குடும்பமே அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறது. தேசிய அரசியலில் காலூன்ற நினைத்து பிராந்திய கட்சியில் இருந்து தேசிய கட்சியாக மாறிய பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திர சேகரராவ்-ன் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையின் நெருக்கடிக்கு உள்ளாகியவர்களின் பட்டியலில் உள்ளார்.
இதனால், எதிர்கட்சிகள், ‘புலனாய்வு அமைப்புகள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன’ என பிரதமருக்கு கடிதம் எழுதியதில் வியப்பில்லை. ஆனால், கட்சிகளின் பட்டியலை நாம் சற்று உற்று நோக்க வேண்டும். கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், அக்கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகரராவ், ஜம்மு காஷ்மீர் தேசியவாத காங்கிரஸ்-ன் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே அணி, சிவ சேனா தலைவர்கள்.. இவர்களில் சிலர் கடிதத்திற்கு முன்பும், சிலர் கடிதத்திற்கு பின்னரும் சோதனைகளை சந்தித்து வருபவர்கள். ஏனென்றால் கட்கரியின் உருட்டு அப்படி...
இந்த கடிதத்தில் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக சொல்லப்பட்டுவரும் பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கையெழுத்திடவில்லை. அதைவிட ஆச்சரியம் இல்லாத ஆச்சரியமான விஷயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் கையெழுத்து போடவில்லை. அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி, இந்த விசாரணைகளை ஆதரிக்கிறதா என்றால், அந்த கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை செய்ததற்காக அக்கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்படியென்றால் உண்மையான சிக்கல் தான் என்ன?. பாஜக எதிர்ப்பு கட்சியே என்றாலும் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் ஒத்துப்போவதில்லை. அவைகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
மூன்றாவது அணி: இந்தச்சூழல் வரும் 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூன்றாவது அணிக்கான பேச்சை வலுவாக உருவாக்கி உள்ளது. இந்த முறை "மூன்றாவது அணி" (காங்கிரஸ் இல்லாத, பாஜக இல்லாத மத்திய ஆட்சி) என்ற எண்ணத்தை உருவாக்கியவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் சிலரே. அதற்கான காய்களையும் அவர்கள் நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக எதிர்ப்பு முகத்தின் முக்கிய அடையாளமான சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அழைப்பு விடுத்தும், இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. அதற்தான காரணத்தை பட்டும் படாமலும் தான் சொல்லியிருந்தார். இது, அவர் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸூன் கை கோர்க்க விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. இதைவிட முக்கியமாக இன்று (மார்ச் 17) கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சந்தித்தபின் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் முக்கியமானது. "மேற்கு வங்கத்தில் நாங்கள் தீதி (மம்தா பானர்ஜி)யுடன் கை கோர்க்கிறோம். இப்போதிலிருந்து எங்கள் நிலைப்பாடு காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுடனும் சமமான இடைவெளியை பேண வேண்டும் என்பதே". அகிலேஷ் விரைவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கையும் சந்திக்க இருக்கிறார்.
மம்தா பானர்ஜி, மார்ச் மாதம் 23ம் தேதி நவீன் பட்னாயக்கைச் சந்தித்து தங்களின் (காங், பாஜகவிடம் விலகியே இருப்பது) கருத்தைத் தெரிவித்து அதுகுறித்து மற்ற எதிர்கட்சிகளிடம் விவாதிக்க இருக்கிறார். இதற்காக இது மூன்றாவது அணி என்று அர்த்தம் இல்லை. ஆனால், பிராந்திய கட்சிகளுக்கு, பாஜகவை எதிர்க்கும் வலிமை உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பாந்தோய்பாத்யாய் தெரிவித்திருக்கிறார்.
வரலாறு முக்கியம்: ஆனால், உண்மையில் மூன்றாவது அணி சாத்தியாமா? இதற்கான பதிலை புரிந்து கொள்ள நாம் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். முதல் முதலில் மூன்றாவது அணி ஆட்சி 1989-ம் ஆண்டில் பிரதமர் விபி சிங் தலைமையில் ஏற்பட்டது. அப்போதும் அவருக்கு ஆட்சியை நடத்துவதற்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவளிக்க வேண்டியது இருந்தது. பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதும் அவர் ஆட்சி கவிழ்ந்தது. சந்திரசேகர் பிரதமாராக வருவதற்கும் காங்கிரஸ் ஆதரவு தேவைப்பட்டது. அடுத்து, கடந்த 1990-களில் தேவ கவுடா, ஐகே குஜரால் என இரண்டு பிரதமர்கள் தலைமையில் மூன்றாவது அணி ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தனது ஆதரவை திரும்ப பெற்றதும், அந்த இரு அரசுகளும் ஆட்சியை இழந்தன. கடந்த 2018-ல் கூட கேசிஆர் மூன்றாவது அணி குறித்த பேச்சைத் தொடங்கினார்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த கட்சிகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் எதிர்ப்பில் உருவானவை. அந்த போக்கு இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆம் ஆத்மி டெல்லியிலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்கின்றன. இப்போது இவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள். இதற்கு மதச்சார்பின்மை மட்டும் தான் காரணமா என்றால் இல்லை. அப்படி என்றால் அவர்கள் காங்கிரஸூடன் இணக்கமாக இருக்கவேண்டுமே.
காங்கிரஸை தவிர்க்க முடியுமா? - இந்தச் சூழ்நிலையில் மூன்றாவது அணி சாத்தியமா? காங்கிரஸின் நிலைமை 1990களில் இருந்தது போல் தற்போது இல்லை. நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது அணி அமைந்தால் அது பாஜகவுக்கு சாதமாக போய்விடும் என்றும் பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. காங்கிரஸின் கூட்டணி கட்சியினான திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மூன்றாவது அணி என்ற எண்ணத்தை விரும்பவில்லை.
ஒருவேளை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மூன்றாவது அணி போட்டியிடும் என்றால், அது 1990-களில் இருந்து வலுவாக காலுன்றிவரும் பாஜகவுக்கும் பொருந்தும். உண்மையில் இந்த ஓட்டத்தில் காங்கிரஸை புறக்கணித்து விட முடியுமா? தீதிக்கும் மற்றவர்களுக்கும் காங்கிரஸை எதிர்த்து சண்டையிடுவதற்கும், பாஜகவை சண்டையிடுவதற்கும் உள்ள வித்தியாசம் தெரியும். அப்படி என்றால் இந்த விளையாட்டு எதற்கு என்ற கேள்வியும் எழலாம். மாபெரும் யானைக்கு அங்குசத்தை காட்டி பயமுறுத்தும் யுக்தியாக கூட இது இருக்கலாம்.
இந்த இடத்தில் நாம், கட்கரியின் உருட்டை நினைத்து பார்க்க வேண்டி இருக்கிறது. அல்லது இப்படியும் நடக்கலாம், பிராந்திய கட்சிகள் அனைத்தும் (காங்கிரஸ் உட்பட) எந்தவித உடன்படிக்கையும் இன்றி பொதுவான ஒரு எதிரிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறலாம். பின்னர் அதிக எம்பிகள் உள்ள கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமராகலாம். மற்றவர்கள் ஆட்சிக்கு உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ ஆதரவு தரலாம். இதனால் பாஜகவால் பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கு, பாஜக இல்லாத அரசுக்கு ஆதரவு தந்த மனநிறைவும் ஏற்படலாம். ஐடியா நல்லா இருக்குதானே... தேர்தலில் எதுவும் நடக்கலாம்...