Published : 11 Sep 2017 10:18 AM
Last Updated : 11 Sep 2017 10:18 AM

ரயில் விபத்துகளை தடுக்க 5 முக்கிய நடவடிக்கைகள்: ரயில்வே அமைச்சகம் உத்தரவு

ரயில் விபத்து மற்றும் தடம் புரளுவதை தடுக்க 5 முக்கிய நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் டெல்லியில் ரயில்வேத்துறையில் பாதுகாப்பு மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை சமீபத்தில் நடந்தது. இதில், ரயில்வே வாரியம், பாதுகாப்பு, கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில் போக்குவரத்தில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளைத் தாமதிக்காமல் எடுக்க வேண்டும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் விபத்துகளில் 34 சதவீதம், ஆளில்லா ரயில்வே கேட்டுகளால் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் ஏற்படும் கோளாறு காரணமாக ரயில் விபத்துகள் நடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, ஆளில்லாத ரயில்வே கேட்டுகளை ஓராண்டுக்குள் அகற்றுதல், புதிய ரயில்களை வாங்குவதை துரிதப்படுத்துதல், ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிப்பை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் செயல்படுத்தி வரும் எல்ஹெச்பி உற்பத்தியை அதிகரித்தல், பனிமூட்டத்தால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில் முகப்புகளில் எல்இடி விளக்குகளைப் பொருத்துதல் ஆகிய 5 நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x