Published : 20 Sep 2017 08:09 AM
Last Updated : 20 Sep 2017 08:09 AM

ரோத்தக் சிறையில் ரூ.20 ஊதியத்தில் காய்கறி செடிகள் வளர்க்கும் குர்மீத் ராம்

பாலியல் பலாத்கார வழக்கில் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் நாளொன்றுக்கு ரூ.20 ஊதியத்தில் காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார்.

ஹரியாணா மாநிலம் சிர்ஸாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்கள் உள்ளன. அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பகட்டான உடைகள், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர கார்கள், பக்தர் பட்டாளம் என குறுநில மன்னர் போல வாழ்ந்த அவர் தற்போது சிறையில் நாளொன்றுக்கு ரூ.20 ஊதியத்தில் வேலை செய்கிறார். 900 சதுர அடி நிலத்தை அவர் உழுது வைத்துள்ளார். சிறையில் தினசரி 8 மணி நேரம் அவர் வேலை செய்கிறார். அடுத்த வாரத்தில் விதைகளை தூவி காய்கறி செடிகளை வளர்க்க உள்ளார். சில மரங்களையும் வளர்க்க உள்ளார். அவர் பயிரிடும் காய்கறிகள் சிறைக் கைதிகளின் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சிர்ஸா ஆசிரமம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு 7 நட்சத்திர ஓட்டல் மற்றும் ஈபிள் டவர், தாஜ்மஹால், டிஸ்னி பேலஸ் ஆகியவற்றின் மாதிரி கட்டிடங்கள் உள்ளன. அவரது சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x