இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
புதுடெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பியான கனிமொழி என்.வி.என்.சோமு, ‘இதர பிற்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது தற்போது கடைபிடிக்கப்படும் கிரீமிலேயர் நடைமுறையால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடைமுறை நீக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்: "இதர பிற்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, அதே பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறியதாக கண்டறியப்படும் நபர்களுக்கு அந்த இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படுவதில்லை. இந்த நடைமுறையையை மாற்றும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை.
ஆனாலும், இதர பிற்பட்டோர் பிரிவினரை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்ற பல திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசுப் பணிகளில் நேரடி நியமனங்கள் நடக்கும்போதும்; மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில வரும்போதும் இதர பிற்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அத்துடன், இதர பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; கல்விக் கடன் மற்றும் வெளிநாட்டு படிப்புக்கென பெறும் கடன் தொகைக்கான வட்டியில் சலுகை; இப்பிரிவு மாணவ மாணவிகளுக்கு தனி தங்கும் விடுதிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை; தொழில் தொடங்கும் நேரத்தில் முதலீட்டுக்கான உதவி; தொழில் தொடங்க குறைந்த வடியில்கடனுதவி என பல சலுகை மற்றும் உதவிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பற்பல ஆண்டுகளாக இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய மத்திய அரசுப் பணி இடங்கள் கணிசமாக உயர்ந்திருந்தது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக அந்த இடங்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்பட்டு 2016-2021 கால கட்டத்தில் 95,563 பணியிடங்கள் இந்தப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
