Last Updated : 05 Sep, 2017 09:01 AM

 

Published : 05 Sep 2017 09:01 AM
Last Updated : 05 Sep 2017 09:01 AM

தனியார் பள்ளி கட்டணத்தில் தலையிட வேண்டாம்..

திர்கால தலைமுறை குழந்தைகளின் கனவை நிறைவேற்ற விரும்பும் இளைஞராக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உடனே ஒரு பள்ளியை தொடங்குவீர்கள். உங்களைப் போன்றே திறமையான ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். அந்தப் பள்ளி உடனே நல்ல பெயர் எடுக்கும். மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறும். பிறகு புதிய சட்டம் (கல்வி உரிமைச் சட்டம்) கொண்டு வருவார்கள். அது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பள வித்தியாசத்தைப் பற்றிப் பேசும். வேறு வழியில்லாமல் உங்கள் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்துவீர்கள்.

டூன் ஸ்கூல், மயோ போன்ற சிறந்த பள்ளிகள் கூட சம்பளத்தை உயர்த்த வேண்டியிருக்கும். அதோடு, 25% மாணவர்கள் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும் என சட்டம் வலியுறுத்தும். இதற்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தாலும் ஓரளவுதான் பணம் வரும். இதனால், இந்த செலவுகளைச் சமாளிக்க மீதமுள்ள 75% மாணவர்களின் பள்ளிக் கட்டணம் உயரும். இதற்கிடையில் மீண்டும் ஒரு சம்பள கமிஷன் மூலம் ஆசிரியர்களின் சம்பளத்தை ரூ.35 ஆயிரமாக உயர்த்த வேண்டியிருக்கும். இதனால் மீண்டும் அந்த 75% மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும்.

தொடர்ந்து பள்ளிக் கட்டணம் உயர்வதால் பெற்றோர்கள் ஆத்திரப்படுவார்கள். இதனால், தனியார் பள்ளிகளில் கட்டணக் கட்டுப்பாடு அரசியலாகிவிட்டது. பள்ளிக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த அரசு மேலும் ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறது. உதாரணமாக, குஜராத்தில் தொடக்கப் பள்ளிகளில் மாதக் கட்டணம் ரூ.1,250 ஆகவும் உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.2,300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாபிலும் இதுபோல் கல்விக் கட்டணத்துக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. உ.பி.யிலும் டெல்லியிலும் வரப் போகிறது. இந்தக் கட்டுப்பாடுகளால் வருமானம் குறைந்து, போதுமான பணம் இல்லாமல், பள்ளிகளை நடத்துவதே கஷ்டமாகி விடும். அப்போது, உங்களுக்கு மூன்றே வழிகள்தான் இருக்கும். பள்ளி ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்து, கணக்குகளைச் சரி செய்வது; அல்லது பள்ளியின் தரத்தைக் குறைத்துக் கொள்வது; கடைசியாக பள்ளியை மூடி விடுவது. உங்களுக்கு தர்ம சங்கடம்தான்.

நீங்கள் நேர்மையானவர் என்பதால் பள்ளிக் கணக்குகளில் மோசடி செய்ய மாட்டீர்கள். யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டீர்கள். மிகச் சிறந்த கல்வியைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியை தொடங்கிய நீங்கள் தரத்திலும் சமாதானம் செய்துகொள்ள மாட்டீர்கள். கடைசியில், வேறு வழியில்லாமல் பள்ளியை மூடும் முடிவுக்குத்தான் வருவீர்கள்.

அரசுப் பள்ளிகளில் கல்வி, பாடப் புத்தகம், சீருடை, புத்தகப் பை, மதிய உணவு என அத்தனையும் இலவசமாகக் கிடைத்தாலும் அங்கு கல்வித் தரம் இல்லை. ஆசிரியர்கள் பாதி நாள் பணிக்கு வருவதில்லை. வரும் ஆசிரியர்களும் சரியாக பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. அப்படியே சிலர் கற்றுக் கொடுத்தாலும் ஆர்வமுடன் அதைச் செய்வதில்லை. இதனால்தான் ஏழைக் குழந்தைகள் கூட அரசுப் பள்ளிகளில் சேர விரும்புவதில்லை.

கடந்த 2011 முதல் 2015 வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் 1.6 கோடி அதிகரித்துள்ளது. இது அரசே தரும் புள்ளிவிவரம். எனவேதான் பெற்றோரும் கட்டணம் அதிகம் என்றாலும் தனியார் பள்ளிகளுக்குத்தான் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

கட்டணக் கட்டுப்பாடும், கல்வி உரிமைச் சட்டமும் சேர்ந்து தரமான பள்ளிகள் மூடலுக்குத்தான் உதவுகின்றன. அல்லது அவை முறைகேடாக நடந்துகொள்ளத் தூண்டுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்க வேண்டும் என்றும் அரசுப் பள்ளிகளில் கிடைக்காத சிறந்த கல்வி, 25% மாணவர்களுக்கு கிடைப்பது நல்லது என்றும் நினைத்துதான் நீங்கள் கல்வி உரிமைச் சட்டத்தை ஆதரித்தீர்கள். ஆனால், இந்தச் சட்டத்தால் பள்ளிகளின் நிர்வாகச் செலவும், பெற்றோரின் கட்டணச் சுமையும் அதிகரித்து விடுகின்றன.

மொத்தமுள்ள பள்ளிகளில் 18% மட்டுமே மாதம் ரூ.1,000-க்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றன. 3.6% பள்ளிகள் மட்டுமே மாதம் ரூ.2,500-க்கு மேல் வசூலிக்கின்றன. இந்த நிலையில் கட்டணக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என அரசியல்வாதிகள் நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? பிரதமர் மோடிக்கு இது புரிகிறது. அதனால்தான் கட்டணக் கட்டுப்பாடுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கிறார்.

பெரிய நகரங்களில் தனியார் பள்ளிகளுக்கு இடையே பெரிய போட்டி நிலவுவதையும் அதனால் கட்டணம் குறைவாக இருப்பதையும் - தேசிய சராசரி ரூ.417 - அவர் உணர்ந்திருக்கிறார். போட்டியே கட்டணத்தைக் குறைக்க உதவும் என்பதால் கட்டணக் கட்டுப்பாடு தேவையில்லை.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? ஆந்திர மாநிலத்தின், 'சுயநிதித் தனியார் பள்ளிகள் சட்டம்-2017-ல்' தீர்வு இருக்கிறது. போட்டியை நம்பும் இந்த சட்டம் கட்டணக் கட்டுப்பாட்டை நம்பவில்லை. தனியார் பள்ளிகள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும் இந்த சட்டம் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்ணயம் போன்றவற்றில் முழு சுதந்திரம் அளிக்கிறது. அதேநேரம் ஊழலுக்கு இடம் கொடுப்பதில்லை. இதோடு ஒவ்வொரு பள்ளியின் இணையதளத்திலும் கட்டண விவரம், ஆசிரியர் கல்வித் தகுதி, பள்ளியில் உள்ள வசதிகள், பலம், பலவீனம் என பெற்றோர் அறிய விரும்பும் அத்தனை விவரங்களும் இருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான விவரங்களை வெளியிடாத பள்ளிகளுக்கும் பொய்யான தகவல்களை அளிக்கும் பள்ளிகளுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். வெளிப்படையான தன்மை, கடுமையான போட்டி இருக்கும் பட்சத்தில் கட்டணக் கட்டுப்பாடு தேவையில்லாததாகி விடும்.

கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் முக்கியப் பங்காற்றி உள்ளன. இங்கு படித்தவர்கள் தொழில் துறையிலும் அரசு நிர்வாகத்திலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களின் தலைமை கணினி மென்பொருள் துறையில் இந்தியாவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. பெங்களூரு, சென்னை, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்கள் உலக அளவில் திறன்படைத்த மையங்களாக உருவெடுத்துள்ளன. இதற்குக் காரணம் தனியார் பள்ளிகள்தான்.

தனியார் பள்ளிகளின் கட்டண விஷயத்தில் தலையிடுவதை விட்டுவிட்டு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதில்தான் தீவிரத்தைக் காட்ட வேண்டும்; குடிமக்களாகிய நாமும் கட்டணக் குறைப்பு கோரிக்கையைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், அசீஷ் தவான் ஆகியோர் சர்வதேச அளவில் தரமான கல்வியை அளிக்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். கட்டணக் கட்டுப்பாடு இருந்தால் உலகத் தரத்தில் கல்வியைக் கொடுக்க முடியாது. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை உருவாக்கினால் மட்டுமே. இங்குள்ள உயர் மத்திய வகுப்பினர், தங்கள் பிள்ளைகளை மிகுந்த பொருட்செலவில் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்புவதைத் தடுக்க உதவும்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x