ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வைப்பது  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு
Updated on
1 min read

புதுடெல்லி: ராகுல் காந்தியை தனது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைக்காமல் இருந்தால், எம்பிக்களை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''இந்தியாவிற்கு எதிராக உள்ளவர்கள் பேசுவதைப் போல் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். தனது பேச்சுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை. அவர் தனது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வாரென்றால் அதில் எங்களுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேச அவருக்கு உரிமை இல்லை. எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தேசத்தைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் கவலையளிக்கவே செய்யும். நாட்டை அவமதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் நாட்டை விமர்சிக்கலாம் என்று அர்த்தமில்லை.

ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றி லண்டனில் பேசியவை அனைத்துமே பொய். முதலில் அவர், தனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி வழங்கப்படவே இல்லை என்றார். இது முற்றிலும் தவறான ஒன்று. ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரமும் சுதந்திரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இரண்டாவதாக, தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பேச அனுமதிக்கப்படவில்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இதுவும் முற்றிலும் பொய்யான ஒன்று. தனது யாத்திரையின் போது ஒரு நாளில் பல முறை அரசாங்கத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார். நாட்டில் அதிகம் பேசக்கூடிய நபர் ராகுல் காந்திதான். அவர் நாடாளுமன்றத்தின் மதிப்பை குலைத்துவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அரசியலமைப்பையும் நீதித்துறையையும் அவமதித்து விட்டார்.

ராகுல் காந்தி யார் என்பது இந்தியர்களுக்குத் தெரியும். ஆனால் வெளிநாட்டில் உள்ள மக்கள் அவர் உண்மையைப் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். காங்கிரஸ் லண்டனுக்குச் சென்று மன்னிப்பு கேட்குமா. அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை'' என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் குறித்து கேட்ட போது, "பிரதமர் முந்தைய அரசின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்தார். பிரதமர் மோடி அவராக பிரதமராகவில்லை. 140 கோடி மக்களின் ஆசீர்வாதத்தால் பிரதமராகியிருக்கிறார். இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் மோடியின் பங்களிப்பை உலகமே அங்கீகரித்துள்ளது'' என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in