

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் உரையாற்றவுள்ள நிகழ்வை இணையத்தில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் முதல் முறையாக செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 28-ல் அவர் அமெரிக்காவில் மேடிசன் சதுக்கத்தில் உரையாற்ற இருக்கிறார். இந்நிகழ்வில் 20,000 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர அமெரிக்காவில் உள்ள பெருநகரங்களில் சுமார் 20 நகரங்களுக்கு மோடி உரை இணையத்தில் நேரலை செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர் வாஜ்பாய், மன்மோகன் சிங் அமெரிக்காவில் உரையாற்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சிறிய அரங்கில் கூடியிருந்த சில நூறு வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்பு மட்டுமே உரையாற்றி இருக்கின்றனர். ஆனால், மோடி உரை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் மோடி, உரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை இந்திய தரப்பில் இருந்து மத்திய மின்சார துறை அமைச்சர் பியுஷ் கோயலும், அமெரிக்காவில் இருந்து குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடு இந்தியர்கள் சந்திரகாந்த், பரத் பாய் ஆகியோரும் மேற்பார்வையிடுகின்றனர்.
மோடி உரையை ஏன் நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர் படேல் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்: மான்ஹாட்டனில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் 20,000 பேருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. முன்னதாக, ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வளவு பேருக்கு தகுந்த உள்ளரங்கு கிடைக்கவில்லை. எனவே நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது என கூறியுள்ளார்.