Last Updated : 07 Sep, 2017 02:54 PM

 

Published : 07 Sep 2017 02:54 PM
Last Updated : 07 Sep 2017 02:54 PM

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு ஆயுள்; இருவருக்கு மரண தண்டனை

மும்பைமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனையும் அபு சலீம் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள 2-வது தீர்ப்பாகும்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் அப்பாவி மக்கள் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். 

இது தொடர்பாக மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஏற்கெனவே யாகூப் மேமன், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில் யாகூப் மேமன் 2015-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கில் இந்த தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். 

இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்தபா தோசா, அபு சலீம், கரிமுல்லா கான், பெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சன்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேர் மீது தனியாக விசாரணை நடைபெற்று வந்தது. இவர்கள் மீது, குற்றச் சதி, அரசுக்கு எதிராக போர் தொடுத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணை முடிந்ததையடுத்து கடந்த ஜூன் 16-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அப்துல் கயூம் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 

முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அபு சலீம், நடிகர் சஞ்சய் தத்திடம் 3 ஏகே-56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், சில ஆயுதங்களை வழங்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தாவூத் இப்ராஹிம் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் தோசாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அபு சலீம் , ஆயுதங்களை டெல்லியிலிருந்து மும்பைக்கு கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றிய வாதம் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் தண்டனை விவரத்தை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதன்படி, தாஹிர் மெர்ச்சன்ட் மற்றும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் ஆகிய 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இதில் தாஹிர் என்பவர் முக்கிய குற்றவாளியும் தலைமறைவாக உள்ளவருமான டைகர் மேமனுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். குண்டு வெடிப்பு தொடர்பாக துபாயில் நடைபெற்ற சதி ஆலோசனையில் தாஹிர் பங்கேற்றுள்ளார். குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை தாஹிர் செய்துள்ளார் என நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபோல பெரோஸ் கானும் முக்கிய பங்காற்றியது நிரூபணமாகி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல அபு சலீம், கரிமுல்லா கான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரியாஸ் சித்திக்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளியான முஸ்தபா தோசா, கடந்த ஜூன் 28-ம் தேதி மும்பை ஜே.ஜே.மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

தீவிரவாதிகள் தப்ப முடியாது

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறும்போது, “மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில், தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது” என்றார். 

தாவூத் தண்டிக்கப்படுவார்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதுபோல தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிம், டைகர் மேமனும் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x