ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் நிலுவை எவ்வளவு? - பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக வழங்குமாறு
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உச்ச நீதின்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பிறகு இந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பிறகு கடந்த ஜனவரி 9-ம் தேதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி கேட்டுக்கொண்டார்.

இதற்கு தலைமை நீதிபதி, “இந்த மனு நிலுவையில் இருந்த காலத்தில் 4 லட்சம் ஓய்வுபெற்ற வீரர்கள் இறந்துள்ளனர். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது”
என்றார். இதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, “இதில் செயல்பாட்டு பிரச்சினைகள் உள்ளன. தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி, “நீங்கள் எப்போது பணம் வழங்க திட்டமிட்டுள்ளீர்கள்?” என்றார். இதற்கு வெங்கடரமணி, “முதல் தவணையாக ரூ.2,000 கோடி வழங்கப்படும். விநியோகத்தை விரைவுபடுத்துவது குறித்து நான் கண்காணிக்கிறேன்” என்றார். இதையடுத்து, "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையின் சரியான அளவை குறிப்பிட்டு 3 பக்க குறிப்பை தாக்கல் செய்ய வேண்டும். இத்தொகை வழங்கப்படும் முறையை அரசு விவரிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களில் முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அக்குறிப்பில் இடம்பெற வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in