8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படவுள்ளது. முதல் ரயிலை இம்மாத இறுதிக்குள் தயாரித்து வழங்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி, முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு "வந்தேபாரத் ரயில்" என்று பெயரிடப்பட்டது. இந்த ரயில் சேவை பல்வேறு முக்கிய வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதையடுத்து, வந்தே பாரத்ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐசிஎஃப்-பில் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஐசிஎஃப்-க்கு ரயில்வே துறை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில் உட்பட 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில், சிலவற்றில் 8 பெட்டிகள் கொண்ட ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன.

8 பெட்டிகள் கொண்ட இந்தரயிலில் 4 பெட்டிகளில் மோட்டார் வாகனம் பொருத்தப்படும். சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். ரயில் ஓட்டுநர் அறை நவீன முறையில் வடிவமைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் முதல் வந்தே பாரத் ரயில் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in