Published : 08 Sep 2017 08:49 AM
Last Updated : 08 Sep 2017 08:49 AM

ரயில்வே ஓட்டல் நில பேர ஊழல்: லாலு பிரசாத்துக்கு சிபிஐ சம்மன் - மகன் தேஜஸ்வியும் ஆஜராக உத்தரவு

ரயில்வே ஓட்டல் நில பேர ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவுக்கும் அவரது மகன் தேஜஸ்விக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ராஞ்சியிலும் பூரியிலும் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. தனியார் ஓட்டல் உரிமையாளர்களான விஜய் கோச்சார், அவரது சகோதரர் வினய் கோச்சார் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பினாமி நிறுவனம் மூலம் லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.

ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ், வினய் கோச்சார், விஜய் கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் லாலு பிரசாத்திடமும் அவரது மகன் தேஜஸ்வியிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது., டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக லாலு பிரசாத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. 12-ம் தேதி ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் கடந்த 5ம் தேதி முடக்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x