விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு - காப்பீட்டு நிறுவனத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு - காப்பீட்டு நிறுவனத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மும்பை: வாகன டயர் வெடிப்பு இறைவன் செயல் அல்ல. ஓட்டுநரின் அலட்சியம்தான் என்பதால் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பட்வர்தன் (38) என்பவர் புனே நகரிலிருந்து மும்பைக்கு 2 நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். நண்பர்களில் ஒருவருக்கு சொந்தமான அந்தக் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது அதன்பின்பக்க டயர் வெடித்ததில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பட்வர்தன் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய கார் நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், பட்வர்தனின் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு 2016-ல் உத்தரவிட்டது. குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒரே நபர் உயிரிழந்தார் என்பதை குறிப்பிட்டு இந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி எஸ்ஜி திகே (ஒற்றை நீதிபதி அமர்வு), மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.

இழப்பீடு தொகை அதிகம்: இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வில் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், “இழப்பீட்டுத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் கார் டயர் வெடித்தது இறைவனின் செயல். கார் ஓட்டுநரின் அலட்சியம் இதற்குக் காரணம் அல்ல” என கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பயணம் செய்வதற்கு முன்பு டயரின் நிலையை ஓட்டுநர் அல்லது உரிமையாளர்தான் சரிபார்த்திருக்க வேண்டும். டயர் வெடிப்பு இறைவன் செயல் அல்லது இயற்கையான செயல் அல்ல. வாகனத்தின் டயர் வெடிப்பதற்கு காற்றின் அழுத்தம், வெப்பம் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அது மனிதனின் அலட்சியம்தான். எனவே, விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in