

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய, அந்த மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
லக்னோவில் உள்ள மொஹலால்கஞ்ச் பகுதியில் 36 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
கணவனை இழந்த அந்த பெண்ணின் சடலம், பால்சிங் கேதா தொடக் கப்பள்ளி வளாகத்தில் கடந்த 17-ம் தேதி மீட்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளி ராம் சேவக் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த ஏ.டி.ஜி.பி. சுதாபா சன்யால், “பாலியல் பலாத்காரம் ஏதும் நடைபெறவில்லை. அந்த பெண்ணின் மீது தாக்கு தல்தான் நடந்துள்ளது. இச்சம் பவத்தில் ஒருவருக்கு மட்டுமே தொடர்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த பெண்ணின் சடலத்தை தடயவியல் பரிசோதனை செய்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முதல்வருக்கும், டி.ஜி.பி. ஏ.எல்.பானர்ஜிக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர் கடிதம் எழுதினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
மாநில அரசு பரிந்துரை
இதைத் தொடர்ந்து மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது: “பாதிக்கப்பட்ட பெண்ணுடைய குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்யுமாறு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுவரை தடயவியல் பரிசோதனைக் கூடத்திலிருந்து 2 அறிக்கைகள் வந்துள்ளன. மேலும் 5 அறிக்கைகள் வரவேண் டியுள்ளது.
அவை வந்த பின்புதான், கொலை எப்படி நடந்தது என்பது தொடர்பான முடிவுக்கு வரமுடியும்” என்றார்.