

பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா நியமனத்தில் உள்ள தடைகளை நீக்க வழிவகுக்கும் டிராய் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா (69) பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்ட விதிகளின்படி ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ ஓய்வு பெற்ற பின்னர் வேறு அரசு பதவிகளை வகிக்கக்கூடாது. இந்த விதியை மீறி நிருபேந்திர மிஸ்ரா பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது நியமனத்துக்காக கடந்த மே 28-ம் தேதி அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
இந்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், பிரதமரின் முதன்மைச் செயலாளர் நியமனத்தை சட்டப்பூர்வமாக்க மக்களவையில் வெள்ளிக்கிழமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், டிராய் சட்ட திருத்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆத் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இந்தச் சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். பின்னர், அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்தபடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக ஆதரவு
அதேவேளையில், பாஜக அரசு அவசரகதியில் கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அது குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதிலளித்த அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, பிரதமரின் முடிவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளித்தார். அதன்பின், குரல் வாக்கெடுப்பு மூலம் டிராய் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் 68 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், அவசர சட்ட மசோதாவை அங்கு கடுமையாக எதிர்ப்போம் என்று அறிவித்தது கவனிக்கத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிருபேந்திர மிஸ்ரா, டிராய் தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.