

தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல். தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகப்படியான காட்சி மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கி விட்டன. கோடை தொடங்குவதற்கு முன்பே தகிக்கத் தொடங்கும் வெப்பம் போல, அங்கு அரசியல் களமும் தகிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சமீபத்தில் நடந்திருக்கும் ரைடு ஒன்று பாஜகவுக்கு வெம்மையையும், காங்கிரஸுக்கு குளுமையையும் ஒரு சேர தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஊழலில் சிக்கிய எம்எல்ஏ: கர்நாடக மாநிலம் தாவணக் கெரே மாவட்டம் சென்னக்கிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர் கர்நாடக அரசின் மைசூரு சாண்டல் சோப் மேம்பாட்டு வாரிய தலைவராக உள்ளார். அந்நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்க தனியார் நிறுவனத்தாரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நிறுவனத்தினரும் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க மார்ச் 3-ம் தேதி முயன்ற போது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது 3 பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்ச பணத்தை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது படுக்கை அறையில் ரூ.6 கோடியை கைப்பற்றினர். இந்த சோதனையும், பணம் பறிமுதலும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருப்பதோடு, பாஜகவுக்கு சோதனையையும் கொண்டுவந்துள்ளது.
கேஜ்ரிவால் கேலி: டெல்லி மதுபான ஊழல் குற்றசாட்டில் டெல்லியின் முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், "கர்நாடாகாவில ஆளும் அரசின் எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி லஞ்சப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியாவிடம் எதுவும் இல்லை. ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு அமைச்சரின் மகனுக்கு பத்ம பூஷன் வருது தரப்படலாம் என்று தெரிவித்தார்.
கேஜ்ரிவாலின் பேச்சில் அர்த்தம் இல்லாமல் இல்லை. தென்மாநிலத்தில் காலுன்ற இருக்கும் வாய்ப்பை இழக்காத மத்திய பாஜக கர்நாடக தேர்தலை மிகவும் தீவிரமாக அணுகி வருகிறது. அதற்காவே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடிக்கடி கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்கின்றனர். தங்களது பிரச்சாரத்தில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கர்நாடகாவை வெறும் பணம் தரும் ஏடிஎம் இயந்திரமாக தான் பார்த்தது. கர்நாடகவின் உண்மையான வளர்ச்சிக்கு பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியே அவசியம் என பேசிவந்தனர். இந்த நிலையில், நிகழ்திருக்கும் லோக் ஆயுக்தாவின் சோதனை நிகழ்வுகளும் கணக்கில் வராத பணப்பறிமுதலும் பாஜகாவிற்கு பெரும் பின்னடைவே.
காங்கிரஸ் வெற்றி?: கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற ஒப்பந்ததாரகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை 40 சதவீத கமிஷன் சர்க்கார் என்று விமர்சித்து வருகிறது. ஆனாலும் அதற்கான எந்த ஆதாரத்தையும் அக்கட்சியால் தரமுடியவில்லை. இந்த நிலையில் மாதல் வீட்டில் நடந்திருக்கும் சோதனையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, "எந்தவித ஆதாரமும் இல்லாமல் எனது அரசை நீங்கள் ஏடிஎம் அரசு என அழைத்தீர்கள். பாஜக மீது நான் ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைப்பதாக கூறினீர்கள். இப்போது இந்த உறுதியான ஆதாரம் (பாஜகவுக்கு எதிரான) ஆதாரம் பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி, அமித் ஷாவை கேலி செய்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதல்வர் பசவராஜ் பொம்மை நிலைமையை சமாளிக்கும் விதமாக, "எனது அரசு தான் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை மீண்டும் நிர்மாணித்து, ஊழல் தடுப்பு அமைப்புக்கு நடவடிக்கை எடுக்க பல்வேறு நிலைகளில் சுதந்திரம் கொடுத்தது. சித்தராமையா முதல்வராக இருக்கும் போது, தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள ஊழல்வாதிகளையும் காப்பாற்றுவதற்காக லோக் ஆயுக்தா அலுவலகத்தை எரித்து புதைத்ததை கர்நாடக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதியின் உறுதி: தொழிலாளர்கள் சங்கத்தின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட லோக் ஆயுக்தா நீதிபதி பிஎஸ் பாட்டீல், 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத ஷெட்டிக்கு பதிலாக கடந்த 2022-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். மாதல் விருபக் ஷப்பா தலைவராக இருந்த கர்நாடகா சோப் மற்றும் டிட்டர்ஜண்ட் நிறுவனத்தின் ஊழல் புகாரும், பிரசாந்த் மந்தால் மீதான ரூ.40 லட்சம் சொத்து குவிப்பு வழக்கும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதி பாட்டீல் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பா மீது நடத்தப்பட்டுள்ள உயர்மட்ட அளவிலான இந்த சோதனை, இதுபோன்ற இன்னும் பல சோதனைகள் இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது. கடந்த மாதத்தில் மாநில பாஜக, காங்கிரஸின் சித்தராமையா பதவியில் இருந்தபோது நடந்த ஊழல்கள் குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தது. அந்த புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுக்கும் பட்சத்தில் அந்த விஷயமும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
காங். வெற்றியும், பாஜக தேவையும்: இதற்கிடையில் மதால்கள் மீது இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் விபரங்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் கேட்டுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக எதிர்கட்சியினர் மட்டும் குறிவைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க, ஊழல் புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை காட்டவும் மேற்சொன்ன நிறுவனங்கள் தனியாக விசாரணையில் ஈடுபடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் தலைவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்றும் ஆர்எஸ்எஸும் பாஜக தலைமையும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் அறிந்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போரட்டம் குறித்த செய்தி தெளிவுபடுத்தப்படும் என்று தலைமை நம்புகிறது.
எது எப்படி இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பாஜகவுக்கு எதிராக பாஜக கட்டமைக்கும் கருத்தியல் யுத்தத்தில் காங்கிரஸ் ஒரு படி முன்னேறி வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் பாஜகவின் தென்மாநில கனவை நிறைவேற்ற பாஜக மீதான இந்த கறையை மாற்றவும், பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் மத்திய பாஜக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.