Published : 11 Mar 2023 10:42 AM
Last Updated : 11 Mar 2023 10:42 AM

''ஜனநாயகத்தை கொலை செய்ய முயல்கிறது மோடி அரசு'' - மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொலை செய்ய முயல்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெறுபவர்கள் தங்களின் நிலங்களை குறைந்த விலைக்கு, லாலுவின் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்துள்ளது. நேற்றைய சோதனையில், ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''தேஜஸ்வி யாதவின் கர்ப்பினி மனைவி வீட்டில் இருந்த நிலையில், அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், லாலு பிரசாத் யாதவ் வயதானவர். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தும் மனிதாபிமானமற்ற முறையில் நரேந்திர மோடி அரசு, சோதனை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துகிறது. ஜனநாயகத்தை கொல்லும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக தீய நோக்கோடு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

நரேந்திர மோடியின் நண்பரான அதானி விண்ணை முட்டும் அளவு சொத்துக்களை குவித்துள்ளார். அவரிடம் ஏன் விசாரணை அமைப்புகள் செல்வதில்லை? இந்த சர்வாதிகாரப் போக்கிற்கு வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x