Last Updated : 11 Sep, 2017 03:09 PM

 

Published : 11 Sep 2017 03:09 PM
Last Updated : 11 Sep 2017 03:09 PM

ஆடை வடிவமைப்பு ஷோக்களுக்குப் பின்னால் சிறைக் கைதிகள்: திஹார் சிறையின் புதிய சாதனை

திஹார் சிறைத்துறை, பெண் கைதிகளை பேஷன் டிசைனிங் படிப்பில் ஈடுபடுத்தி அவர்களை ஆடை வடிவமைப்பாளராக தகுதிபடுத்தியுள்ளது.

புதுடெல்லியிலுள்ள பியர்ல் அகாடமியோடு இணைந்து பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக 'திஹார் பேஷன் லேபரேட்டரி'யில் பேஷன் டிசைனிங் படிப்பை ஏற்படுத்தி இந்த சாதனையை திஹார் சிறைத்துறை செய்துள்ளது.

பேஷன் ஷோக்கள் என்றாலே அதில் அணிவகுத்துவரும் மாடல்கள்தான் கவன ஈர்ப்பு விசை. ஆனால், இங்கு மேடையில் மிளிரும் ஒய்யார நடை காட்சிகளுக்குப் பின்னால் சிறைக் கைதிகள் இருக்கிறார்கள் என்பது சற்று வித்தியசமான நிகழ்வு.

20 மாணவிகள்

ஃபேஷன் படிப்பை சமீபத்தில் முடித்த திஹார் சிறை வளாகத்தில் ஒரு குழுவாக இயங்கிவரும் பெண் கைதிகளுக்கு இனி மனநிலைரீதியாகவும் ஒரு புதிய கதவு திறக்க உள்ளது.

கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பேஷன் வடிவமைப்பு பயிற்சிக் கல்வியில் சேர்ந்த முதல் பேட்ச் மாணவிகள் அனைவரும் தேர்ச்சிபெற்றுள்ளனர். முதல் பேட்ச் மாணவிகளான இந்த 20 கைதிகளும் செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற நிறைவுவிழாவில் விதவிதமான ஆடைவடிவமைப்பை வெளிப்படுத்தும் ராம்ப் வாங்கிங் நிகழ்வு உள்ளிட்ட நிறைவு விழாவில் படிப்பை சிறப்பாக முடித்ததற்கான பட்டங்களை பெற்றுள்ளனர்.

கற்பித்தல் திறன்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பெண் கைதிகள் தங்களுக்கான சுயாதீனமான வாழ்க்கையை தொடங்க உதவும்விதமாக இக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

இயல்பிலேயே கைவினைத் திறன்களைக் கொண்ட பெண்களுக்கும் பயிற்சியின் அடிப்படையிலும் தகுதியை உயர்த்திக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இத்தகைய கல்வியை வழங்குவதில் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் வடிவமைத்தல் மற்றும் இந்திய ஆடைகள் தயாரிப்புப் பயிற்சியை இக்கல்வி திட்டம் உள்ளடக்கியுள்ளது.

பட்டமளிப்புவிழாவில் ஒரு அங்கமாக பேஷன் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பியர்ல் அகாடமி மாணவிகள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து கொண்டு பெண் கைதிகளே ராம்ப் வாக்கிங்கில் பங்கேற்று அசத்தினர்.

பின்னர் மாலையில் நடந்த நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அப்போது சிறைச்சாலையின் இயக்குநர் ஜெனரல் சுதிர் யாதவ், ''இந்தக் கல்வித் திட்டம் சில மாதங்களிலேயே பெண் கைதிகளின் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' என்று கூறினார்.

மிகப்பெரிய வரவேற்பு

''ஒரு கல்வி நிறுவனம் எங்களுடன் இணைந்து செயல்பட்டது இதுவே முதல் முறை. இக் கல்வியின் மூலம், இந்தக் கைதிகள் இனிவரும் காலத்தில் திறன்மிக்க பணியாளராகவும், ஏன் ஒரு தொழிலதிபராகவும்கூட வரவேண்டும் என்ற அவர்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்றும்விதமாக துடிப்பான ஈடுபாடு காட்டியதையும் இம்முயற்சிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததையும் பார்க்கமுடிந்தது" என்று கூறினார் சிறைச்சாலை இயக்குநர்.

சிறை வாழ்க்கைக்குப் பிறகு உதவி

பியர்ல் அகாடெமியின் தலைமை நிர்வாக அதிகாரி நந்திதா ஆப்ரஹாம், ''சிறைவாழ்க்கைக்குப் பிறகு வெளியே சென்றதும் இந்தப் பெண் கைதிகள் சுயமாக சம்பாதிக்க இந்த சான்றிதழ் படிப்பு உதவும்'' என்றார்.

அடுத்த அணிக்கு விரைவில் பயிற்சி தொடங்கப்படுவது குறித்து அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஓர் உணர்ச்சிவேகத்தில் தவறுகள் செய்ய நேர்ந்துவிடுகிறது. நேர்ந்த தவறுக்கும் அதைத் திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களுக்கும் போதிய இடைவெளி தேவைப்படுகிறது. சிறைவளாகங்கள் கைதிகளை நல்வாழ்வை நோக்கி தகுதிப்படுத்தும் கூடங்களாக மாறிவருவது மனித சமுதாயம் அடுத்தகட்ட நாகரிக தளத்தை நோக்கிப் பயணிப்பதையே காட்டுகிறது.

கைதிகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு பியர்ல் அகாடமியோடு இணைந்து திஹார் சிறைவளாகம் இக்கல்வி திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x