டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனிடையே பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இவ்வழக்கில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹப் ஹூசைன் கூறியதாவது: மணிஷ் சிசோடியா, அவரது உதவியாளர் விஜய் நாயர், தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ஆகியோர் இணைந்து மதுபான கடை உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். ரூ.292 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கவிதா தொடர்புடைய சதர்ன் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. சிசோடியாவின் பிரதிநிதியாக விஜய் நாயர், கவிதாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
கடந்த ஓராண்டில் சிசோடியா பயன்படுத்திய 14 மொபைல் போன்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் போன்களும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளும் சிசோடியாவின் பெயரில் இல்லை. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் மறுக்கிறார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஜோஹப் ஹூசைன் வாதாடினார்.
மணிஷ் சிசோடியா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், மோகித் மாத்தூர், சித்தார்த் அகர்வால் ஆஜராகி வாதாடினர்.
அவர்கள் கூறியதாவது: டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிகாரிகள், நிதித்துறை செயலாளர், டெல்லி துணை நிலை ஆளுநரின் பார்வைக்கு சென்ற பிறகே மதுபான கொள்கை அமல் செய்யப்பட்டது. சிசோடியாவின் பிரதிநிதி விஜய் நாயர் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமலாக்கத் துறை கூறுகிறது. சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்துள்ளது. இவ்வாறு சிசோடியாவின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கினார். இதன்படி மார்ச் 17-ம் தேதி வரை சிசோடியாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்கள் காவலில் விசாரிக்க உள்ளனர்.
இதனிடையே சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது 21-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
