Last Updated : 14 Sep, 2017 07:51 AM

 

Published : 14 Sep 2017 07:51 AM
Last Updated : 14 Sep 2017 07:51 AM

பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை தொடர்கிறதா? - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுப்பு

பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ‘சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாக தெரிகிறது’என புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு பெற்றுள்ளார்.

இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி கூறும்போது, “சிறை விதிமுறைகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்டனை கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க முடியும். நெருங்கிய உறவினர்கள் என்றால் ஒரு சந்திப்பில் 4 முதல் 6 பேர் வரை கைதியை சந்திக்கலாம். ஆனால் சிறை அதிகாரிகள் விதிமுறைக்கு எதிராக, அதிக பார்வையாளர்கள் சசிகலாவை சந்திக்க அனுமதித்துள்ளனர்.

கடந்த ஜூலை 5-ம் தேதி டிடிவி தினகரன், வெங்கடேஷ், பழனிவேலு உள்ளிட்ட 6 பேர் சந்தித்துள்ளனர். அடுத்ததாக ஜூலை 11-ம் தேதி இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா உள்ளிட்ட 7 பேர் சந்தித்துள்ளனர்.

இதேபோல கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சசிகலாவை சந்தித்துள்ளார். சிறைமுறையின்படி மாலை 5 மணிக்கு மேல் பார்வையாளர்கள் கைதிகளிடம் பேச முடியாது. ஆனால் புகழேந்தி சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

சசிகலா சிறையில் உள்ள அங்காடியில் பற்பசை, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட எந்த பொருட்களும் வாங்கவில்லை. இதன்மூலம் சசிகலாவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வெளியில் இருந்து கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது. முன்னாள் டிஐஜி ரூபாவின் புகாருக்கு பிறகும், தொடரும் சிறப்பு சலுகைகளை கர்நாடக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறும்போது, “நான் அக்ரஹாரா மத்திய சிறையில் நேரில் ஆய்வு செய்தேன். சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளைப் போல சசிகலாவும் சாதாரணமாகவே நடத்தப்படுகிறார்” என்றார்.

சசிகலாவுக்கு சலுகை தொடரும்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்ததாலும், வருமான வரி செலுத்துவதாலும் சசிகலாவுக்கு சிறையில் தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, கட்டில் உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சசிகலா பொதுச்செயலாளர் பதவி யில் இருந்து நீக்கப்பட்டதால், சிறையில் வழங்கப்பட்ட சலுகை கள் பறிபோகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சசிகலா வருமான வரி செலுத்துவதால், அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடரும் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x