

ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படும் திட்டம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மியான்மரிலிருந்து இந்தியாவை நோக்கி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மனித உரிமை ஆணைய அமைப்புகள் மற்றும் ஐ. நா. சபை ஆகியவை வருத்தம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ’தி இந்து’ ஆங்கிலத்திடம் அவர் கூறும்போது, "சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் திட்டம் இல்லை. இந்தியா எப்போதும் மனிதாபிமான அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்றார்.
ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சைத் ராத் ஹுசைன் ரோஹிங்கியாக்கள் முஸ்லிம்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கூறிய கறுத்து பற்றி கேட்டபோது, "ஐக்கிய நாடுகள் சபையும், பிற அமைப்புகளும் இந்தியா எதிர்கொள்ளும் உள் நாட்டு பாதுகாப்பு பிரச்சினை குறித்து உணரவில்லை.
இந்தியா மிகவும் மனிதாபிமான நாடாகவே இருந்துள்ளது. அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளின்படி சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இன்னும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில்தான் உள்ளனர்" என்றார்.