Published : 08 Mar 2023 05:20 AM
Last Updated : 08 Mar 2023 05:20 AM

பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான 70 எச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து (எச்ஏஎல்) வாங்க மத்திய அமைச்சரவை கடந்த 1-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பு ரூ.6,838 கோடி ஆகும்.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இது அமைந்துள்ளது. இதுபோல எல்&டி நிறுவனத்திட
மிருந்து ரூ.3,100 கோடிக்கு 3 பயிற்சி கப்பல்களை வாங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்
பட்டு தயாரிக்கப்பட்டவை (ஐடிடிஎம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி போர் விமானங்கள் மற்றும் பயிற்சி கப்பல்கள் வாங்க, எச்ஏஎல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனித்தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,900 கோடி ஆகும். இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 70 எச்டிடி-40 ரக விமானங்களை 6 ஆண்டுகளுக்குள் எச்ஏஎல் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கும். விமானப்படையில் சேரும் பைலட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.

இதுவரை பயிற்சி விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் சில ராணுவ தளவடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எல்&டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, பயிற்சி கப்பல்கள் தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளியில் தயாரிக்கப்படும். இந்த கப்பல்கள் 2026-ல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல்கள் கடற்படை மாலுமிகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்க பயன்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x