மகன், மகள்கள் பராமரிக்காததால் ரூ.1.5 கோடி வீடு, நிலத்தை அரசுக்கு அளித்த முதியவர்

நாது சிங்.
நாது சிங்.
Updated on
1 min read

லக்னோ: உ.பி. மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் நாது சிங் (85). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரே மகன் சஹாரன்பூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

மனைவி காலமானதால் சொந்த வீட்டிலேயே நாது சிங் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கிராமத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மகனும், மகள்களும் பராமரிக்காததால் முதியோர் இல்லத்தில் நாது சிங் சேர்ந்தார். அங்கும் யாரும் வந்து பார்க்கவில்லை.

இதனால் மனமுடைந்த நாது சிங் உயில் எழுதி அதை சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து நாது சிங் கூறியதாவது: எனக்கு இப்போது 85 வயதாகிறது. என்னுடைய இந்த வயதில் நான் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் வசித்துவந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை பராமரிக்கவில்லை. உதாசீனம் செய்தனர். எனவேதான் என்னுடைய வீடு,நிலங்களை அரசுக்கு உயில் எழுதிவைத்துவிட்டேன். நான் இறந்தபிறகு அந்த இடத்தில் பள்ளி, மருத்துவமனையை அரசு கட்டவேண்டும். மேலும் எனது உடலையும், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் எழுதிக் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சார் பதிவாளர் கூறும்போது, “நாது சிங் எழுதி வைத்துள்ள உயில் எங்களிடம் வந்து சேர்ந்துள்ளது. சட்டப்படி அவருடைய உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பின் அரசு சட்டப்படி அவரது சொத்துகளை எடுத்துக்கொள்ளும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in