Published : 18 Sep 2017 09:42 AM
Last Updated : 18 Sep 2017 09:42 AM

பச்சிளம் குழந்தையை பராமரிக்க தந்தைக்கு 3 மாதம் விடுமுறை: காங்கிரஸ் எம்.பி.யின் தனி நபர் மசோதாவில் வலியுறுத்தல்

தங்கள் பச்சிளங்குழந்தைகளை பராமரிப்பதற்காக, அனைத்து துறை சார்ந்த ஆண் ஊழியர்களுக்கும் (தந்தை) 3 மாதம் வரை விடுப்பு வழங்க வேண்டும் என்று ஒரு தனி நபர் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதவ், இது தொடர்பாக ஒரு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா பற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து ராஜீவ் சதவ் கூறியதாவது:

குழந்தைகளின் தொடக்க கால பராமரிப்பு என்பது தாய், தந்தை ஆகிய இருவரின் கூட்டு பொறுப்பு ஆகும். பிறந்த குழந்தையை குறிப்பிட்ட காலத்துக்கு மிகுந்த கவனமுடன் முறையாக வளர்த்தெடுக்க இருவரும் தங்கள் நேரத்தை செலவிட வேண்டியது அவசியம். இது தொடர்பாக ஒரு மசோதாவை உருவாக்கி உள்ளேன்.

அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைப் போல ஆண் ஊழியர்களுக்கும் குழந்தையை பராமரிக்க 3 மாதம் வரை விடுப்பு வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது குழந்தை பிறந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் இந்த சலுகையைப் பெறலாம்.

இந்த மசோதா சட்டமானால் அமைப்புசாரா மற்றும் தனியார் உட்பட அனைத்து துறை சார்ந்த 32 கோடிக்கும் மேற்பட்ட ஆண் ஊழியர்கள் பயனடைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்போது, அனைத்து இந்திய மற்றும் மத்திய குடிமைப் பணி விதிமுறைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு தங்கள் பச்சிளங் குழந்தையை பராமரிக்க 15 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படுகிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்த விடுமுறையை வழங்குகின்றன. புதிய மசோதா விடுமுறை காலத்தை அதிகரிக்க வகை செய்வதுடன் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களும் பயனடைய வகை செய்கிறது.

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களாக இருந்தது. இதை 26 வாரங்களாக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது ஆண் ஊழியர்களுக்கும் இதுபோன்ற விடுமுறை வழங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x