Published : 06 Mar 2023 10:17 AM
Last Updated : 06 Mar 2023 10:17 AM

லடாக்| எல்லை கிராமத்தில் மக்களுடன் தங்கிய மத்திய அமைச்சர்

எல்லை கிராம மக்களோடு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் மக்களோடு ஒரு இரவு தங்கி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

நாட்டின் எல்லையோர கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தம் நோக்கில் துடிப்பான கிராமங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத்து 400 எல்லையோர கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வலிமையான எல்லையோர கிராமங்கள்; வலிமையான நாடு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கிராமங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எல்லையோர கிராமங்களில் மத்திய அமைச்சர்கள் மக்களோடு ஒரு இரவு தங்கி அவர்களின் குறைகளைக் கேட்கும்; அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்துகொள்ளும் புதிய முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளின் அமைச்சர் பூபேந்தர் யாதவ், கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் லடாக்கின் எல்லையோர கிராமங்களுக்குச் சென்றார்.

லடாக்கின் சாகா பஸ்சூர், ரேசாங் லா, சூஷூல் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற மத்திய அமைச்சருக்கு எல்லை கிராம மக்கள் பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூடாரங்களில் வாழ்ந்து பஷ்மினா கம்பளி தயாரிக்கும் நாடோடிகளான ரெபோ பழங்குடியினருடன் உரையாடிய அமைச்சர், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

கிராம மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், யூனியன் பிரதேசமாக லடாக் உருவான பிறகு அங்கு பல்வேறு சாலைத் திட்டங்கள் முடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார். நிலுவையில் உள்ள பணிகள் கண்காணிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். லடாக்கில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க சூரிய மின்சக்தி திட்டங்களை ஏற்படுத்த ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் பூபேந்தர் யாதவ் சுட்டிக்காட்டினார். மேலும், சாங்-லா போர் நினைவிடத்திற்குச் சென்ற மத்திய அமைச்சர், நாட்டைக் காக்க இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, சூஷூல் என்ற எல்லையோர கிராமங்களுக்குச் சென்ற மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், அங்குள்ள மக்களோடு கலந்துரையாடினார். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அந்த கிராமத்திலேயே அன்று இரவு தங்கினார். மறுநாள் காலை, மேலும் பல எல்லை கிராமங்களுக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x