

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் தாங்களாகவே தேசிய புலனாய்வுக் கழகமான என்.ஐ.ஏ. முன் செப்டம்பர் 9-ம் தேதி ஆஜராவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித்தில் இன்று அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் கூறும்போது, “காஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் தேசிய புலனாய்வுக் கழகம் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரத்தை முடித்து வைக்க நாங்களே என்ஐஏ முன் ஆஜராவது என்று முடிவெடுத்தோம்.
ஏற்கெனவே புதுடெல்லிக்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோம், சனிக்கிழமையன்று நேரடியாக தேசியப் புலனாய்வுக் கழக தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறோம். திஹார் சிறையின் கதவுகளைத் திறந்து வையுங்கள், நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். காஷ்மீர் தேசத்தையே என்ஐஏ பயங்கரத்துக்குள் செலுத்தியுள்ளது.” என்றார்.
தேசியப் புலனாய்வுக் கழகம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டது. குறிப்பாக நன்று அறியப்பட்ட வர்த்தகர்கள் 6 பேருக்குச் சொந்தமான வளாகங்களில் சோதனைகள் நடைபெற்றதையடுத்து பிரிவினைவாதத் தலைவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
ஏற்கெனவே எல்லைதாண்டிய சட்ட விரோத நிதிநடவடிக்கைகளினால் ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் ஏற்பட்டதாக பிரிவினைவாத தலைவர்கள் 7 பேரை தேசிய புலனாய்வுக் கழகம் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.