உத்தவ் கட்சி இனி..? - தேர்தல் ஆணைய முடிவும், முந்தி நிற்கும் சவால்களும்!

உத்தவ் கட்சி இனி..? - தேர்தல் ஆணைய முடிவும், முந்தி நிற்கும் சவால்களும்!
Updated on
4 min read

"முஸ்லிம்கள் வெல்ல விரும்புகிறீர்களா அல்லது வில் அம்பு வெல்ல விரும்புகிறீர்களா?" - இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிராவில் கட்சியை வளர்த்தெடுக்கவும், வாக்காளர்களைக் கவரவும் தேர்தல்களின்போது சிவ சேனா கட்சி முன்வைத்த நம்பிக்கையான முழக்கம் இது. தற்போது இந்த முழக்கத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது அதற்கு சாட்சி, உத்தவ் அணி சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் சமீபத்திய பேச்சு.

"மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம், தலித் சமூகத்தினர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாதான் உண்மையான சிவ சேனா என்று மனபூர்வமாக அங்கீகரித்துள்ளனர். நான் பயணம் செய்த இடங்களில் நமது முஸ்லிம் தோழர்கள் 'சிவ சேனா ஜிந்தாபாத்', 'ஜெய் மகாராஷ்டிரா' என்று கூறி எங்களை அன்புடன் வரவேற்றனர்" என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா எம்.பி.யும், அவரது தீவிர விசுவாசியுமான சஞ்சய் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

முதல் முழக்கத்திற்கும், இரண்டாவது பேச்சுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உத்தவ் தாக்கரேவின் தற்போதையை நிலைமையையும், அவர் முன் இருக்கும் சவால்களையும் தெளிவாக உணர்த்துகிறது.

கட்சிப் பிளவு: கடந்த ஆண்டு ஜூன் மாதம், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவ சேனா நீடிப்பதை விரும்பாத கிளர்ச்சி எம்எல்ஏகள், எம்பிகளுடன் வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி வைத்து மாநிலத்தின் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து சிவ சேனா, உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகளாக செயல்படத் தொடங்கியது. அப்போது யார் உண்மையான சிவ சேனா என்ற விவாதம் எழுந்தது. கட்சியின் பெயருக்கும் சின்னத்திற்கும் உரிமை கோரும் போட்டி தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவிற்கு கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தினையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

மேலும் தற்போதைக்கு உத்தவ் தாக்கரேவின் அணி, சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) என்றும் அக்கட்சிக்கு மாஷால் (எரியும் சுடர்) சின்னத்தினையும் ஒதுக்கி இருந்தது. இந்த முடிவு மகாராஷ்டிராவில் காலியாக இருந்த இரண்டு இடைத்தேர்தல் முடியும் வரை மட்டுமே என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து ஷிண்டே அணியைச் சேர்ந்த மூத்த சிவ சேனா தலைவர் கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, உத்தவ் தாக்கரே அணியில் மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏகள் மற்றும் தலைவர்களை உண்மையான சிவ சேனாவிற்கு அணி மாற வழிவகுக்கும்" என்றார்.

மாற்று சின்னம் புதியதில்லை: மறுபுறம், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், "கட்சியின் வேட்பாளர்கள் பல முறை பல்வேறு சின்னங்களில் சிவ சேனா சார்பில் போட்டியிட்டிருக்கிறார்கள். உதாரணமாக,1970-ம் ஆண்டு பரேல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)-யைத் தோற்கடித்து சிவ சேனாவின் முதல் எம்எல்ஏவாக வெற்றி வாகைச் சூடிய வாமன்ராவ் மஹாதிக் போட்டியிட்டது உதயசூரியன் சின்னத்தில் தான்.

1978-ம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில், ஜனதா கட்சியின் அலையில் சிவ சேனா தோல்வியடைந்த போது கட்சியின் வேட்பாளர்கள், வாள், கேடயம் என பல்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். 1985-ம் ஆண்டுத் தேர்தலின் போது இப்போது தேசியவாத காங்கிரஸில் முன்னணித் தலைவராக இருக்கும் சாகன் புஜ்பால், அப்போது, எரியும் சுடர் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே சிவசேனா தலைவராக வென்று சட்ட சபைக்கு சென்றார். கடந்த 1989-ம் ஆண்டுதான், தேர்தல் ஆணையம் சிவ சேனா கட்சியை மக்கள் பிரகிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் அங்கீகரித்து, வில் அம்பு சின்னத்தை ஒதுக்கியது" என்றார்.

இவை ஒருபுறம் இருக்க தேர்தல் ஆணையத்தின் முடிவு சிவ சேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சிவ சேனா என்ற பெயரும் அதன் வில் அம்பு சின்னமும் வலிமையான விசுவாசத்தின் உணர்வினையும், மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளின் மதிப்புகளையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

சிவ் கர்ஜனை: இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் முடிவினை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றமும் தாக்கரே அணியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. உத்தவ் அணிக்கு இது கொஞ்சம் ஆறுதலான விசயம் தான் என்றாலும், தற்போதைய பின்னடைவை சரி செய்ய உத்தவ் தாக்கரே அணியான சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), கட்சியின் நிர்வாகத்தினை கீழ்மட்ட அளவிலிருந்து வலுப்படுத்துவதற்காக "சிவ கர்ஜனை" என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, சிவ சேனா தலைவர்கள், எம்எல்ஏகள் அடங்கிய ஐந்து முதல் ஆறு நிர்வாகிகளைக் கொண்ட பல குழுக்கள் மகாராஷ்டிராவில் உள்ள 36 மாவட்டங்களுக்கும் பயணம் செய்யும். அப்போது கட்சியின் கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி கட்சியின் பலம், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தினை மீட்பதற்காக நடக்கும் சட்டப்போராட்டம் போன்றவைகளை எடுத்துக்கூறும் என்று சிவ சேனா (உத்தவ் அணி) தலைவர்கள் தெரிவித்தனர்.

“துரதிர்ஷ்டமான சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும் நிலையில், கிராமப்புற நிர்வாகிகள், கீழ்மட்டத்தில் இருக்கும் ஷிவ் சைனிக் உறுப்பினர்களுக்கு கொஞ்சம் ஊக்கமும், உறுதி மொழிகளும் வழக்குவது தேவையாக இருக்கிறது. இந்த ஷிவ் கர்ஜனை பிரச்சாரம் அதனை சரியாக செய்யும். தேர்தல் ஆணையத்தின் முடிவால் கட்சியின் பெயரும் சின்னமும் தற்போது எங்களிடம் இல்லை. ஆனால் மக்கள் மட்டோஸ்ரீயுடனும், தாக்கரேவுடனும் நிற்கிறார்கள்" என்று உத்தவ் அணி எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிவ சேனா பிளவு, சின்னம் கைவிட்டுப் போனது போன்ற பின்னணிகளுடன் மகாராஷ்டிராவில் நடந்த முதல் இடைத்தேர்தலை இரண்டு சிவ சேனா அணிகளும் சந்தித்தன. புனே மாவட்டத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் பிப்.26-ம் தேதி நடந்த இடைத் தேர்தலில், 30 ஆண்டு காலம் பாஜக கோலோச்சி வந்த கஸ்பா பெத் தொகுதியில் சிவ சேனா(உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் பாஜக வேட்பாளரை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். யார் உண்மையான சிவ சேனா என்ற கேள்வி எழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஆதரவு கட்சி ஒன்று தோல்வியை சந்தித்திருப்பது உத்தவ் அணிக்கான பலமாகவும், முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னிற்கும் சவால்கள்: சட்டப்போராட்டம், சட்டமன்றத்தில் நடத்தும் போராட்டங்களைக் கடந்து இந்த பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு உத்தவ் தாக்கரே முன் இன்னும் சில சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன. முன்னரே சொன்னது போல, கட்சியின் பெயரும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரே அதிகாரப்பூர்வ சிவ சேனா என்று அர்த்தமாகிறது. இதனால், உத்தவ் அணியில் இருந்து இன்னும் பலர் ஷிண்டே அணிக்கு தாவ வாய்ப்புகள் அதிகம்.

சிவ சேனாவின் 55 எம்எல்ஏக்களில் 40 பேர், 19 எம்பிகளில் 13 பேர் ஷிண்டே அணியில் உள்ளனர். 11 எம்எல்ஏக்கள், 3 எம்பிகள் மட்டும் தாய் கழகமான உத்தவ் அணியில் நீடிக்கின்றனர். பிளவுக்கு பின்னர், கட்சியின் கொறடாவாக இருந்த உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த அனில் பரப் மாற்றப்பட்டு, ஷிண்டே அணியைச் சேர்ந்த விப்லவ் பஜோரியா சிவ சேனாவின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் சட்டப்பேராவை குறிப்புகளில் இரண்டு அணிகளும் சிவ சேனா என்ற குறிப்பிடப்பட்டுள்ளன. தங்களைத் தனி அணியாக அங்கீகரிக்குமாறு நாங்கள் கோரப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் தான் உண்மையான சிவ சேனா என்று உத்தவ் அணி தெரிவித்து வருகின்றனர்.

மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் உள்ள சிவ சேனா கட்சியின் சிவ சேனா பவன் மற்றும் கட்சிக்கு சொந்தமான 227 ஷாகாகளில் மூன்று பங்கு ஸ்ரீசிவை சேவா அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை உத்தவ் தாக்கரேவின் மனைவி மற்றும் அவரது ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் சேனா பவனின் அதிகாரத்தை ஷிண்டேவால் உடனடியாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஷிண்டே தற்போது தனது தலைமை அலுவலகமாக தானேவில் உள்ள ஆனந்த ஆஷ்ரமத்தையே பயன்படுத்தி வருகிறார். ஆனாலும், அறக்கட்டளையின் கீழ் இல்லாத சொத்துக்களின் மீது உரிமை கோரி கலகத்தை உருவாக்க முடியும். அப்படி நடந்தால் அது கட்சியின் அடிமட்ட அளவில் பிரச்சினையை உண்டு பண்ணும்.

தற்போதைய சூழ்நிலையில், உத்தவ் தாக்கவுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு அனுதாபம் ஏற்பட்டுள்ளது. இது அவருக்கு சாதமான விஷயமே. ஆனாலும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 2024-ம் ஆண்டில் தான் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, பிஎம்சி உள்ளிட்ட மகாராஷ்டிரா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் முவுகள் மூலம் யார் உண்மையான சிவ சேனா என்பது தீர்மானமாகும் என்பாதால் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உத்தவ் தாக்கரேவால் தன் மீதிருக்கும் அனுதாப அலையை ஒரு வருடத்திற்கு நீட்டித்து வைத்திருக்க முடியுமா என்பது இங்கே கேள்வியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தவ் தாக்கரே அணிக்கு, சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற புதிய பெயரையும், எரியும் சுடர் சின்னத்தினையும் வழங்கியது. இதனை அடிமட்டதொண்டர்தள் வரை எடுத்துச் செல்ல உத்தவ் அணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவில், மகாராஷ்டிராவில் இரண்டு இடைத்தேர்தல் முடியும் வரை மட்டுமே இந்த சின்னம் உத்தவ் அணிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் தற்போதைக்கு அதனைப் பயன்படுத்த உத்தவ் அணிக்கு அனுமதி அளித்துள்ளது. கட்சிக்கு மீண்டும் ஒரு சின்னம் ஒதுக்கப்படும் போது அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவது கடினமாக இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in