சோனியா காந்திக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்திக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று கூறும்போது, “நெஞ்சக மருத்துவத் துறையின் மூத்த மருத்துவர் அரூப் பாசு மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையில் சோனியா இருந்து வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தன.

இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம், சுவாசப் பாதையில் ஏற்பட்ட வைரஸ் நோய்த் தொற்றுக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த 85-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி அண்மையில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றதுடன் தனது இன்னிங்ஸ் (அரசியல் பயணம்) நிறைவு பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக அப்போது அவர் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்னிங்ஸ் நிறைவு பெற்றது என்று சோனியா கூறியதால் 2024 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் எனவும் அவர் வழக்கமாக போட்டியிடும் ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டின் முதல் நாளில், கட்சியின் உயர்மட்டக் குழுவான காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவதில்லை என கட்சியின் வழிகாட்டுதல் குழு முடிவு செய்தது. கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க அதிகாரம் அளித்தது.

137 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தனது குடும்ப விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கேவிடம் சோனியா காந்தி கடந்த அக்டோபரில் ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in