

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுளாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மத்திய அரசு மறுஆய்வு மனு
கருணை மனு மீது முடிவெடுக்க காலதாமதமானதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுளாகக் குறைத்தது.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
"வழக்கின் பின்னணியை ஆராயாமல் மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும் இதுபோன்ற வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க முடியாது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று மத்திய அரசின் மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"மத்திய அரசின் மனுவையும் அதனோடு இணைக்கப்பட்ட ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்தோம். அதில் நியாயமான எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை, எனவே மனுவை நிராகரிக்கிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களோடு சேர்த்து இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
வீரப்பன் கூட்டாளிகள் வழக்கு
வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்தும் மத்திய அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டது.